ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அனைவரின் அழகுக்கும் அழகு சேர்ப்பது கூந்தல். ஆனால், பலருக்கு கூந்தல் வறண்டு, பொலிவிழந்து, பிளவுபட்டு காணப்படுகிறது. இந்தத் தலையாய பிரச்னைக்குத் தீர்வுகள் இதோ
முட்டை
இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை எடுத்து, இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு, ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதனை ‘பேக்’ ஆக தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து அலசவும். முட்டையில் நிறைந்துள்ள புரதச்சத்து, கூந்தலை வலிமையாக்குவதுடன், வறட்சியிலிருந்தும் காக்கும்.
மயோனைஸ்
பிரெட் சாண்ட்விச் செய்ய உதவும் மயோனைஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை கப் எடுத்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசவும். இது வறண்ட கூந்தலைப் பளபளப்பாக்கும்.
இளம் தேங்காய் எண்ணெய்
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய இளம் தேங்காயின் எண்ணெயை வாங்கி, தேவையான அளவு எடுத்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாகும் வரை ஆறவைத்து, தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலசவும். கேசத்துக்கு நல்ல கண்டிஷனர் இது.
டீ ட்ரீ ஆயில்
தலையில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் பூஞ்சை, அரிப்பு, செதில் செதிலாக உதிரும் டெட் ஸ்கின் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது, டீ ட்ரீ ஆயில் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்). இதைத் தலையில் நன்கு தேய்த்து 20 நிமிடங்களில் அலசினால், கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பான சூட்டில் தலையில் தடவவும். இதில் வைட்டமின் `சி’ உள்ளதால் முடிக்கு ஈரப்பதம், பளபளப்பு அளிப்பதுடன் முடியை வலிமையாக்கும்.
அவகோடா
அவகோடா பழத்தின் சதைப்பகுதியுடன் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தலை மற்றும் கூந்தலில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து அலசவும். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் நிறைந்த அவகோடா, வறண்ட தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், வறண்டு உடைந்த கூந்தலை மிருதுவாக்கி, கண்ணாடி போன்ற பளபளப்பையும் அளிக்கும்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுபடுத்தி, தலையில் தேய்த்து பத்து நிமிடங்களில் அலசவும். இது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் இன்ஸ்டன்ட் ரெமடி.
அலோ வேரா
ஒரு சோற்றுக் கற்றாழை கிளையின் உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து அலசவும். இது கேசத்தை வறட்சியிலிருந்து காப்பதுடன், புத்துணர்வும் அளிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…