இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (Wales) ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இந்த லீக் ஆட்டங்களில் மொத்தம் 18 அணிகள் விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டிகளில் அவ்வப்போது சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறும். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும். அந்தவகையில், வார்விக்ஷையர் (Warwickshire) மற்றும் டெர்பிஷைர் (Derbyshire) அணிகள் நேற்று (ஜூன் 7) பிரிமிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோதின.
முதல் இன்னிங்சில் வார்விக்ஷையர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெர்பிஷைர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லூயிஸ் ரீஸ் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் களமிறங்கினர்.
அப்போது, டேனி பிரிக்ஸ் வீசிய 11-வது ஓவரில் ஹைதர் அலி பந்தை அடிக்க தவறிய நிலையில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் டேவீஸ் கைக்கு பந்து சென்றது.
அப்போது, ஸ்டம்பிங் செய்ய முற்பட்ட நிலையில், ஹைதர் அலி அங்கேயே இருந்தார். இருப்பினும் சில நொடிகளில் அங்கிருந்து கிரீஸை விட்டு ஹைதர் அலி வெளியேற, கையில் வைத்திருந்த பந்தை வைத்து அலெக்ஸ் டேவீஸ் ஸ்டம்பிங் செய்தார்.
விக்கெட் கீப்பர் கையில் பந்து இருக்கும்போது, அங்கிருந்து டெர்பிஷைர் அணி வீரரான பாகிஸ்தானைச்சேர்ந்த ஹைதர் அலி வெளியேற முயற்சி செய்ததை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
எனினும், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார் ஹைதர் அலி. அவரின் டெர்பிஷைர் அணி, 19.3 ஓவரிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சட்டப்பேரவைக்குள் குட்கா: ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!