சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனத்தின் ‘பார்டு’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது.
சாட்ஜிபிடியில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாப்டின் பிங் தேடுபொறி, ஆபிஸ் சூட் உள்ளிட்ட பல்வேறு தளங்களுடன் சாட்ஜிபிடியை இணைப்பதாக சமீபத்தில் அறிவித்தது.
அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் சாட்ஜிபிடி அசுர வளர்ச்சியடைந்தது பல்வேறு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது.
இந்நிலையில், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதியதாக ’பார்டு’ என்ற பெயரில் உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இன்று (பிப்ரவரி 7 ) ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘LaMDA’ எனப்படும் உரையாடல் பயன்பாட்டுக்கான மொழி அப்ளிகேஷன் என்ற தளத்தின் கீழ் ’பார்டு’ சாட்பாட் இயங்கவுள்ளதாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். மேலும், சிக்கலான தலைப்புகளை எளிதாக மாற்றக்கூடியதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்து உயர்தர பதில்களை வழங்கும் வகையில் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.