தொங்கு பாலத்தில் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக இன்று மோர்பிக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பழமையான தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் மோர்பியில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாயமானவர்களை தேடும் பணி 3வது நாளாக இன்றும் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
பாலம் புனரமைப்பில் மோசடி?
மோர்பி நகரின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த பழமையான தொங்கும் பாலத்தை பழுதுபார்க்கும் பணி ஓரேவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் பாலத்தை பழுதுபார்ப்பதற்காக பாலம் மூடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி தொங்கு பாலம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. ஆனால் பழுது நீக்கிய பிறகு நகராட்சி அதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கவில்லை.
இந்நிலையில் பாலத்தில் பொதுமக்கள் கணக்கின்றி செல்ல கடந்த மாதம் 30ம் தேதி மாலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலம் புனரமைக்கப்பட்டதில் பெரும் மோசடி நடந்திருப்பதாகவும், இதில் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடி இன்று குஜராத்தின் மோர்பியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை சந்திக்க இருக்கிறார்.
அதனால் அந்த மருத்துவமனையை அவசர அவசரமாக சீரமைத்து வருகின்றனர்.
அத்துடன் வளாகத்தை சுத்தப்படுத்துவது, கட்டிட சுவர்களுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிரெண்டிங்கில் Go_Back_Modi
இந்நிலையில் மோர்பிக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே மோடிக்கு எதிராக கோ பேக் மோடி கலகக்குரல் எழும்பி வந்தது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்தே தற்போது எழுந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மேலும் #Go_Back_Modi ஹேஷ்டேக்கின் கீழ் மோர்பி தொங்கு பாலம் புனரமைப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகக் கனமழை!
குஜராத் பாலம் விபத்து: விசாரணை நடத்தும் உச்ச நீதிமன்றம்!