ஜாம்பவான் மரணத்திலும் செல்ஃபி : வசைபாடும் நெட்டிசன்கள்!
மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே வின் உடலுக்கு முன்னதாக சிரித்தபடி செல்பி எடுத்த பிஃபா தலைவருக்கு உலகநாடுகளைச் சேர்ந்த பல்வேறு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்து உலகில் பிரேசில் நாட்டுக்காக மூன்று உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்து, கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ‘கால்பந்து மன்னன்’ பீலே.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
அவரது இறப்பு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பீலே மறைவை அடுத்து 3 நாட்கள் நாட்டில் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று பிரேசில் அரசு அறிவித்தது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் இருந்து பீலேவின் உடல் நேற்று காலை 10 மணிக்கு கொண்டுவரப்பட்டு அவர் நீண்டகாலமாக விளையாடிய கால்பந்து கிளப்பான சாண்டோஸின் விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பின்னர் அவரது உடல் அப்பகுதியின் வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெக்ரோபோல் எகுமெனிகா கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் அங்கு குவிந்துள்ளனர்.
சிரித்தபடி செல்ஃபி சர்ச்சை
அதன்படி பிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ பீலேவுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத தருணத்தில் பீலே உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அருகே நின்று தனது குழுவினருடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்தார்.
![gianni infantino selfie](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/pele-funeral-620x420.jpg)
உலகமே பீலேவின் மறைவுக்கு துக்கம் அனுசரித்து வரும் நிலையில், கியானியின் செல்ஃபி வைரலாக அவரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
’ஜாம்பாவனுக்கு நேர்ந்த அவமரியாதை’, குறைபட்ச மரியாதை கூட கொடுக்க முடியாதா ?’ என்று ரசிகர்கள் கியானிக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் கியானி இன்ஃபான்டினோ இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இன்று நடைபெற உள்ள இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரேசில் நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.
பீலேவின் இறுதிச் சடங்கு நடைபெறும் தென்கிழக்கு நகரமான சாண்டோஸில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: விடிந்தால் டிஸ்மிஸ்- நள்ளிரவில் விலகிய காயத்ரி- நடந்தது என்ன?
புதுக்கோட்டை தீண்டாமை: 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு!