சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீராங்கனை ஒருவர் தற்போது உணவு டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் திறமை இருந்தும் விளையாட்டுத் துறையில் சாதிப்பது என்பது இன்னும் சவாலான காரியமாகவே உள்ளது. தனக்குள் திறமைகள் இருந்தும் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இந்திய வீரர்கள் பலருக்கும் அதனை அடைய தேவையான பொருளாதார வசதிகளும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.
இதனால் அவர்கள் தங்களது திறமைகளை மறைத்தோ அல்லது மறந்தோ வாழ்வாதாரத்திற்காக வேறு வேலைகளில் ஈடுபடும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
சமீபத்தில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீராங்கனையான பொலாமி அத்திகாரி(24) சைக்கிளில் சொமேட்டோ டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்துவரும் வீடியோ இணையத்தில் வைரலானது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இந்த இளம் வீராங்கனை பொலாமி, இந்திய கால்பந்து அணியின் சார்பாக U-16 அளவில் பங்கேற்று இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று விளையாடியுள்ளார்.
குடும்ப சூழலே காரணம்
அந்த வீடியோவில் பொலாமி கூறுகையில், ”நான் சிறு வயதிலேயே எனது தாயை இழந்துவிட்டேன். கிளாஸ்கோவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினேன். எனினும் அந்த தொடரில் இந்தியா 6 வது இடத்தைப் பிடித்தது.
அதன்பின்னர் இந்தியா திரும்பிய எனக்கு வங்காளத்தில் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
அதோடு வீட்டை நிர்வகிக்க தந்தையால் முடியாத நிலையில், மோசமான குடும்ப சூழல் காரணமாக உணவு டெலிவரி செய்து வருகிறேன். இதன்மூலம் ஒருநாளைக்கு ரூ.400 வரை சம்பாதிக்கிறேன்” என்று பொலாமி கூறியுள்ளார்.
மேலும் தான் இப்போது இந்திய கால்பந்து சீனியர் அணிக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றும், தனக்கு யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய, மாநில அரசு உதவ வேண்டும்
இதனையடுத்து தற்போது பொலாமிக்கு ஆதரவாக இணையத்தில் பலத்த குரல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியுடன் பரிதாபமாகவே உள்ளது. குத்துச்சண்டையில் இருந்து கால்பந்து வரை இந்த நிலையே உள்ளது.
பொலாமி போன்ற விளையாட்டு வீரர்களின் அவலநிலையை தேசிய ஊடகங்கள் விவாதிக்க வேண்டும். மேலும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இதனால் சமூகத்தில் விளையாட்டுத் துறை வீரர்களின் மீதான எதிர்கால வாழ்வு குறித்த அச்சம் நீங்கும். மேலும் திறமையான வீரர்கள் தைரியமுடன் தங்களை நிரூபிக்கவும் சிறந்த சூழல் இந்தியாவில் உருவாகும். ” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கிறார் முதல்வர் – சேகர்பாபு
தடையை மீறி பிரதமருக்கு மாலை அணிவித்த இளைஞர்: கர்நாடகாவில் பரபரப்பு!