ஆர்.ஆர்.ஆர்-ஐ பின்பற்றுங்கள்: சேலம் எஸ்பியின் ஆர்டர் வைரல்!

டிரெண்டிங்

காவல்துறை அதிகாரிகள் ஆர்.ஆர்.ஆர்-ஐ பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாவட்டம் எஸ்.பி. சிவக்குமார் குறிப்பாணை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகச் சாதனை படைத்து வெற்றி பெற்றது ஆர்.ஆர்.ஆர்.

மேலும் பல சர்வதேச விருதுகளையும் குவிக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் இன்று (மார்ச் 13) அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது ஆர்.ஆர்.ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல்.

இதனைப் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் ஆர்.ஆர்.ஆர்-ஐ பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் குறிப்பாணை வெளியிட்டுள்ளார்.

அதில், “காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அனைவரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் கண்டிப்புடனும் காவல் பணி ஆற்ற வேண்டும்.காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வருவோரைக் காக்க வைக்காமல், உடனடியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்துக்களைத் தடுக்க, தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து, அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கோவில் திருவிழாக்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, விழா நடத்துபவர்களிடம் கலந்து பேசி, எவ்வித பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் / வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களிடம் தினமும் பேசி அவர்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். நல்லவர்களுக்கு பாதுகாப்பாகவும், கெட்ட நடத்தை உள்ளவர்களுக்கு பயத்தையும் உண்டாக்கும் வகையிலும் உங்கள் பணி சிறந்து இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காவலரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களது திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பாக வேலை வாங்குவது உயர் அதிகாரிகளின் திறமையாகும். பெண்கள், வயதானவர்களுக்குப் பாதுகாப்பு செய்தல், பள்ளி கல்லூரி பகுதிகளில் கண்காணித்தல் போன்ற பலவிதமான கலவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாகனத் தணிக்கையின்போது, மக்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில், குடும்பத்துடன் பயணிக்கும் குடும்பத் தலைவரை, அவரது குடும்பத்தினர் முன்பாக அவமானப்படுத்தாமல், அவர் என்ன தவறு செய்திருக்கிறார்களோ, அதனைக் கண்ணியமாக எடுத்துச் சொல்லி, அதற்குரிய வழக்குப் பதிய வேண்டும். பிரச்சனை செய்பவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், அவர்கள் செய்யும் தவறுகளைப் படம் பிடிக்கவும், பின்னர் தவறுக்கேற்ப வழக்குப் பதிவு செய்யவும் வேண்டும்.

குறிப்பாக, தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் மரியாதையுடன் (மரியாதை – respect) பேச வேண்டும். சிறப்பாகச் சிறப்பாக வரும் அனைவரின் திறமைகளையும் கண்டறிந்து பாராட்டுதல் (அங்கீகாரம்- recognition) வேண்டும். காவலர்களின் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதிய ஓய்வு (ஓய்வு- rest) வழங்கும் வகையில், அன்றாட வேலைகளைத் திட்டமிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உடல் நலன் இருப்பதில்லை. அதனால் தேவையான விடுமுறைகளை உடனடியாக வழங்க வேண்டும். இந்த மூன்று ஆர்ஆர்ஆர்-களை கண்டிப்பாகச் செயல்படுத்தி, கண்ணியத்தோடு பணியாற்றிய சேலம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

பிளஸ் டூ தேர்வு: இத்தனை பேர் எழுதவில்லையா?

ஆன்லைன் சூதாட்ட தடை – பேச அனுமதிக்கவில்லை : டி.ஆர்.பாலு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.