முதல்முறையாக திருநங்கையால் மும்பையில் தொடங்கப்பட்டுள்ள சலூன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை மாயநகரி நகரில் ஜைனப் படேல் என்ற திருநங்கை சலூன் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த சலூனின் திறப்பு விழா நேற்று (மார்ச் 25) நடைபெற்றது. மொத்தம் 7 திருநங்கைகள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்கள் இந்த சலூனில் பணியாற்றுகின்றனர்.

மேலும் இந்த சலூனில் அழகு துறையில் ஆர்வமுள்ள திருநங்கைகள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு மட்டும்தான் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று டிரான்ஸ்ஃபர்மேஷன் சலூன் முதலாளியான ஜைனப் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சலூனை தொடங்குவதற்காக deutsche bank மற்றும் rotary club of bombay எங்களுக்கு உதவி செய்தனர்.
இந்த சலூன் மூலம் திருநங்கைகள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இங்கு பணிபுரிபவர்கள் ஸ்டார்ட் அப்களை தொடங்குவதற்காக உத்வேகம் பெறுவார்கள்.
இதனால் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் திருநங்கைகள் எதிர்காலத்தில் பெரிய முன்னேற்றத்தைப் பெற முடியும்” என்று கூறினார்.
திருநங்கைகள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் முன்னெடுப்பாக இந்த சலூனை ஆரம்பித்ததாக ஜைனப் தெரிவித்திருந்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை சலூன் தொடங்கி, அதில் மற்ற திருநங்கைகள் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு வேலை வழங்கி வரும் இந்த நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சலூன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
மோனிஷா