கடந்த 1994 ல் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளியிட்ட முதல் வேலைவாய்ப்பு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வேலைவாய்ப்பு செய்தியை தொழில்நுட்ப பத்திரிகையாளர் ஜான் எர்லிச்மேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
இன்றைய நவநாகரீக வாழ்வில் நம் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் முதல் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் வரை அனைத்துப் பொருள்களையும் யாரும் கடைகளுக்குச் சென்று நேரடியாக வாங்காமல் ஆன்லைன் மூலம் வாங்கும் பழக்கம் பரவிவருகிறது.

நம்மிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் நமக்குப் பிடித்தமான பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து நம் வீட்டில் இருந்த படியே வாங்கிவிடலாம்.
அந்தளவிற்கு அமேசான் பிளிப்கார்ட், மீசோ, மிந்ரா, போன்ற பல்வேறு இ.காமர்ஸ் தளங்கள் மக்களின் ஆன்லைன் பயன்பாட்டில் கொடிகட்டி பறக்கிறது.
இந்த வரிசையில் உலகளவில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனம் இருக்கிறது.
இவ்வளவு பிரபலமான இ.காமர்ஸ் தளத்தை மக்களிடம் கொண்டு செல்ல அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அளப்பரியவை.
தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்து, இ.காமர்ஸ் தளத்தைத் தொடங்கி பின்னர், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை முதன் முதலாக 1994 ல் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெப் பெசோஸ் கொடுத்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில், “கணினி அறிவியலில் BS, MS அல்லது PhD பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.
இதோடு சிறந்த தகவல் தொடர்பு திறன் அவசியம் என்றும் எங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்புவோர் சிக்கலான அமைப்புகளை திறமையாக கையாள்பவராக இருக்க வேண்டும்.
இணைய சேவையகங்கள் மற்றும் HTML தெரிந்திருப்பது உதவியாக இருக்கும்” என்று முதல் வேலைவாய்ப்பு செய்தியில் கூறியிருக்கிறார்.

இந்த பழைய வேலைவாய்ப்பு செய்தி இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெப் பெசோஸ் இந்த விளம்பரத்தைக் கொடுக்கும் போது, ’’Awake.com,” “Browse.com அல்லது “Relentless.com” என்ற பெயர்களை பரிசீலித்து வந்ததாகவும்,
இறுதியாகத்தான் அமேசான் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியான ஒரு ஆண்டிற்குள் அமேசான் நிறுவனம் ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்ய தொடங்கியது.
பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தளமாக விளங்குகிறது ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமேசான் காடுகள் வறண்ட புல்வெளியாக மாறும்: எச்சரிக்கும் ஆய்வு!