இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தூக்கத்தில் இருந்து எழுந்து பேட்டிங் செய்ய ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூன் 9) மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியில் இருந்து 2வது இன்னிங்ஸிற்கு வார்னர் மற்றும் கவாஜா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதனிடையே ஆஸ்திரேலியா அணியில் 3வது விக்கெட்டிற்கு களமிறங்க வேண்டிய லபுஷேன் நீண்ட நேரம் பீல்டிங் செய்த களைப்பில் பெவிலியனில் பேட் அணிந்தபடி அரை தூக்கத்தில் இருந்தார். இதை எப்படியோ கவனித்து படம்பிடித்த கேமராமேன் நேரலையில் காட்டினார்.
அதே நேரத்தில் அதிரடியாகப் பந்து வீசிய சிராஜ் 1 ரன்னில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்டு எழுந்த லபுஷேன் வார்னர் ஆட்டமிழந்து விட்டார் என்பதை தெரிந்து கொண்டு பதற்றத்துடன் கையில் பேட்டை எடுத்து கொண்டு மைதானத்தில் களமிறங்கினார்.
இதனிடையே லபுஷேன் களமிறங்கும் போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “தூக்கத்தில் எழுந்துவிட்டீர்களா? காபி குடித்து விட்டீர்களா?” என்று கலாய்த்தார். இவை அனைத்தும் டிவியில் லைவாக காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டிங் செய்த லபுஷேன் 4 பவுண்டரியுடன் 118 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். 3வது நாள் போட்டி முடிவிற்கு பிறகு பேசிய லபுஷேன், “எல்லா நேரமும் போட்டியை பார்த்து கொண்டிருக்க முடியாது.
நான் போட்டியின் இடையே சிறிது நேரம் நான் கண்களை மூடியபடி தான் இருந்தேன். தூங்கவில்லை. அதனால் தான் சிராஜ் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போட்டியின் போது தூங்கிவிட்டு லபுஷேன் குழந்தைகள் போல காரணம் சொல்வதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
மோனிஷா
JuniorAsiaCup: ஜப்பானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி!