ஜெயலலிதாவுடன் இருப்பது நிர்மலா சீதாராமனா? உண்மை என்ன?

Published On:

| By christopher

கேரளாவைச் சேர்ந்த ராஜன் உன்னி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை பதிவிட்டார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜன் உன்னி வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 5500க்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளனர்.

உண்மையில் ஜெயலலிதாவின் அருகில் அமர்ந்திருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை. அவர் 70-80களில் பிரபல பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சிவசங்கரி சந்திரசேகரன். அவர் சிறந்த சமூகசேவகியும் ஆவார்.

மேலும் இந்த புகைப்படம் பிரபல புகைப்படக் கலைஞரான ’ஸ்டில்ஸ் ரவி’ என அழைக்கப்பட்ட வி. ரவி வர்மாவால் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதனை சிவசங்கரி பற்றி எழுதியுள்ள சித்ரதீபா ஆனந்தராம் உறுதிபடுத்தியுள்ளார்.

1970களில் எழுத்தாளர் சிவசங்கரி

ஜெயலலிதா – சிவசங்கரி இருவரும் சிறந்த நண்பர்கள். ஜெயலிதா, 9 வயது சிறுமியாக இருந்தது முதல், நீண்டகாலங்களாக சிவசங்கரிக்குப் பள்ளித்தோழியாக இருந்துள்ளார்.

சிவசங்கரி பரதநாட்டியக்கலைஞரும் ஆவார். இவருடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம், இவருடைய 15ஆம் வயதில் நிகழ்ந்தது. சிவசங்கரியின் எழுத்துகளை தாண்டி ஜெயலலிதா அரசியலில் ஈடுபடும் வரை இருவருக்கும் இணைப்பு பாலமாக பரத நாட்டியம் இருந்தது.

தனது சுயசரிதை ’சூர்யவம்சம்’ என்ற நூலில் இருவருக்கும் இடையே இருந்த நட்பை குறித்து ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதியுள்ளார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சித்ரதீபா ஆனந்தராம் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார்.

ஒருமுறை இது குறித்து சித்ரதீபாவிடம் எழுத்தாளர் சிவசங்கரி கூறுகையில், “70களின் பிற்பகுதியில் எப்போதோ ஸ்டில்ஸ் ரவி எடுத்த புகைப்படம் இது.

விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி கிராமத்திற்கு இடம் பெயர்ந்திருந்த நான், சென்னைக்கு வரும்போதெல்லாம் அம்முவுடன் (ஜெயலலிதா) தரமான நேரத்தை செலவிடுவேன்.

ஒரு நாளில், நாங்கள் இருவரும் அச்சிடப்பட்ட பட்டுப் புடவைகளை அணிந்திருந்தோம், அது அன்றைக்கு பெண்களின் நவநாகரீக உடையாக இருந்தது. என்னுடையது கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்ட பட்டு. சாம்பல் மற்றும் ஊதா அச்சிடப்பட்ட பட்டினை அம்மு அணிந்திருந்தாள். அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

நாங்கள் புகைப்படம் எடுக்க முடிவு செய்தபோது, அவளே எனக்கு சில மேக்கப்பைப் போட்டு, என் தலைமுடியையும் சரிசெய்தாள்.
அவள் என்னை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டின் வராண்டாவில் ஊஞ்சலில் உட்கார வைத்தாள். அவள் கைப்பிடியில் அமர விரும்பினாள்.

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டும் பிணைப்புடனும் இருந்ததால், அது மறக்க முடியாத நாள்,” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சிவசங்கரி குறிப்பு :

குடும்ப உறவுகளால் சீரழிக்கப்பட்டு, தாயான இளம்பெண்களைச் சந்தித்து, அவர்களின் வேதனைகளை, மன குமுறல்களை தொகுத்து, “உண்மைக் கதைகள்” என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார் சிவசங்கரி. பெண்பிறப்பின் மறுபக்க அவலங்களை, வெளிச்சமிட்டுக்காட்டிய சில தமிழ்நூல்களுள் இதுவும் ஒன்று.

இவருடைய வளர்ப்பு மகள் “லலிதா” என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் சுயசரிதையை “சூர்யவம்சம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார் சிவசங்கரி. 77 வயது வரையிலான, சிவசங்கரியின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் தான் ஜெயலலிதா குறித்து எழுதியுள்ளார்.

தன் தந்தை பெயர் சூரிய நாராயணன் என்ற காரணத்தால், “சூரிய நாராயணனால் உதித்த வம்ச மகளின் வரலாறு” என்ற பொருளில், “சூரிய வம்சம்” என்று, தன் சுயசரிதைக்குப் பெயரிட்டுள்ளார் சிவசங்கரி.

வளர்ப்பு மகள் லலிதா, 2018ஆம் ஆண்டில், கல்லீரல் மற்றும் இரைப்பை புற்றுநோயால் காலமானார். அவரது மறைவு, சிவசங்கரியைக் கடுமையாகப் பாதித்தது.

தமிழின் முதல் பேசும் புத்தகத்தை வெளியிட்டவர் சிவசங்கரிதான். நூலின் பெயர் “அம்மா சொன்ன கதைகள்”. தன் அம்மா சொன்ன 6 கதைகளை எழுதி, ஓவியர் கோபுலுவின் ஓவியங்களோடு தனிநூலாக வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டில் தன் குரலில், இதே நூலை ஒலிநாடாவாகவும் வெளியி்ட்டார் சிவசங்கரி.

1980 களில், இவருடைய ரசிகர், ரசிகைகள், தங்கள் குழந்தைகளுக்கு, இவருடைய பெயரையே சூட்டிமகிழ்வது வாடிக்கையாக இருந்தது.

சிறுகதை, நாவல், புதினம், கட்டுரைகள், பயணநூல்கள், பேட்டிகள் என, பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் ஈடுபட்டு, ஜொலித்து, வெற்றிகண்ட தமிழ்ப்பெண் எழுத்தாளர்களுள் சிவசங்கரி முக்கியமானவர்.

கிறிஸ்டோபர் ஜெமா

80 வயதிலும் காதல்… மேடையில் போட்டுடைத்த பாரதிராஜா

திமுக செய்த மிகப்பெரிய சாதனை இது தான்: ஈபிஎஸ் பிரச்சாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share