அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளின் கூட்டுமுயற்சியில் உருவான ஜேம்ஸ் வெப் அதி நவீன தொலை நோக்கி எடுத்த விண்வெளி புகைப்படங்கள் இணைய உலகை ஆக்கிரமித்துள்ளன. இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு 3 நாட்களைக் கடந்த பின்பும் ஆச்சர்யத்தில் இருந்து மீளமுடியாமல் இணைய உலகமே மிரண்டு போய் உள்ளது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. சமையலறை மேடைக்கு பயன்படுத்தும் கிரானைட் கல்லை நாசா வெளியிட்டுள்ள விண்வெளி புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.
கிரானைட் கல் கருப்பு நிறத்தில் உள்ளதால் அதன் மேல் உள்ள வெள்ளைப் புள்ளிகள் நட்சத்திரங்களைப் போல காட்சி அளிக்கின்றன. புகைப்படத்திற்கு மேலே Nice try, NASA என்கிற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் எலான் மஸ்க் காமெடி மீம்களை பகிர்வதையும், ட்வீட் பதிவுகளுக்கு நகைச்சுவையாக ரிப்ளை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
~அப்துல் ராபிக் பகுருதீன்