பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதியை அனுமதிக்க பயனர்கள் அவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது அதற்கான ஒரு ட்விட்டில் அதிகபட்ச எழுத்து வரம்பு 280 ஆக உள்ளது. ஆனால் நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் ட்விட்டரின் தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் செய்ய உள்ள சில மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பினை எலான் மஸ்க் சமீபத்தில் வெளியிட்டார்.
அதில், ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கட்டணத்தை அடிப்படையாக வைத்து நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பரங்கள் பாதியாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக எலான் மஸ்க் இன்று (ஜனவரி 8) தனது ட்விட்டர் பக்கத்தில், ” நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி ட்விட்டரில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
டுவிட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும். அதுகுறித்து ஒருவாரத்தில் தெரிவிக்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் டுவீட்களுக்கு இடையில் செல்ல வலது மற்றும் இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யும் வசதி உருவாக்கபட உள்ளது” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா