ஆப்பிள் ஐபோன் Vs எலான் மஸ்க்: என்ன நடக்கிறது?

டிரெண்டிங்

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சமூக வலைதளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செனகல், உள்ளிட்டோரை வேலையில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார்.

தொடர்ந்து ட்விட்டரில் ப்ளூ டிக் பயனாளர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும். கருத்து சுதந்திரத்திற்கு ட்விட்டர் களமாக இருக்கும் என்ற எலான் மஸ்க், 50 சதவிகிதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துவரும் எலான் மஸ்க் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில், ”ஆப்பிள் ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை தடை செய்துள்ளது. ட்விட்டரில் விளம்பரம் செய்வதையும் ஆப்பிள் நிறுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதால், ட்விட்டருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆப்பிள் போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய 30 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், தனது ட்விட்டர் பதிவை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை டேக் செய்துள்ளார்.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டிற்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஆப் ஸ்டோரிலிருந்து ஒரு செயலியை அகற்றுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு பார்லர் என்ற செயலியை நீக்கியது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு பார்லர் செயலி ஐபோனில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து பார்லர் நிறுவனம், ”ஆப்பிள் நல்ல தயாரிப்புகளை உருவாக்கலாம். ஆனால் அவர்கள் சில காலமாக கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 16 முதல் 22 வரை 2,208,00 டாலரை ட்விட்டர் விளம்பரங்களுக்காக செலவு செய்த ஆப்பிள் நிறுவனம், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு நவம்பர் 10 முதல் 16 வரை 1,31,600 டாலர் மட்டுமே செலவழித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஐபோன் நிறுவனம் ட்விட்டரில் சிறந்த விளம்பரதாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், ”ஆப்பிள் மற்றும் கூகுள் தங்கள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் செயலியை நீக்கினால், எலான் மஸ்க் தனது சொந்த ஸ்மார்ட்போனை தயாரிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பாதி மக்கள் ஒரு சார்புடையதாக செயல்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை பயன்படுத்தமாட்டார்கள். எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டுகளை உருவாக்குகிறார். ஸ்மார்ட் போனை உருவாக்க மாட்டாரா?” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவிற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ”அந்த நிலைமை வராது என்று நினைக்கிறேன். ஆனால் வேறு வழியில்லை என்றால் நான் ஒரு மாற்று தொலைபேசியை உருவாக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்துடன் நேரடியான மோதலில் ஈடுபட்டுள்ளதால், அவர் விரைவில் ஆப்பிள் ஐபோனுக்கு மாற்றாக புதிய தொலைபேசியை உருவாக்குவார் என்று ட்விட்டரில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

செல்வம்

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை: போலீஸ் பாதுகாப்பு!

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி?

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.