மூடப்படுகிறதா ட்விட்டர்?
இன்று (நவம்பர் 18) காலையில் இருந்து அசுர வேகத்தில் ஆர்.ஐ.பி. ட்விட்டர் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதாக சொல்லப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ப்ளு டிக் வெரிஃபிக்கேசனுக்காக 8 டாலர் என நிர்ணயம் செய்தார். பல்வேறு பெரிய நிறுவனங்கள் நஷ்டத்திற்கு உள்ளானதால் எலன் மஸ்க் இந்த முடிவிலிருந்து பின் வாங்கினார்.
உலகளவில் இருந்து ட்விட்டரில் பணியாற்றி வரும் 50% பணியாளர்களை ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ள எலன் மஸ்க், தற்போது கூடுதலாக இன்னும் பலரை அவர்களாகவே வேலையை விட்டுச் செல்லும் படி ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்.
உதாரணமாக, மஸ்க்கின் இந்த முன்னெடுப்பால், இந்தியாவின் ட்விட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 200 ஊழியர்களில் தற்போது 20-25 ஊழியர்கள் தான் வேலையில் இருக்கிறார்கள்.
புதிதாக தொடங்கப்பட்ட ஆப்பிரிக்கா அலுவலகத்தில் வெறும் ஒரு நபர் மட்டும் வேலையில் இருந்தால் போதுமானது என்று சொல்லியிருக்கிறார் எலன் மஸ்க் . அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்ற அனைவரையும் பணிநீக்கம் செய்து டிசம்பர் மாதம் அவர்களின் கடைசி வேலை நாளாகவும் அறிவித்திருக்கிறார்.
இப்படியாக அவர் பணம் செலவாவதைக் குறைக்க வேண்டுமென்பதற்காக , தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்து தற்போது வரை, கிட்டத்தட்ட 4400 ஒப்பந்த ஊழியர்களை வெளிப்படையாக பணியிடை நீக்கம் செய்த இவர் , சில ஒப்பந்த ஊழியர்களுக்கு வேறு மாதிரியாகவும் செக் வைத்திருக்கிறார்.
ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் அக்ஸிஸ் செய்யும் இமெயில் மற்றும் ஸ்லாக் போன்றவைகளை செயலழிக்க செய்து , அவர்களை வேலை செய்ய விடாமல் செய்திருக்கிறார். இதனால் ஊழியர்கள் அவர்களே வேலையை விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த விஷயம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் மேலாளருக்கே தெரியாமல் தான் நடந்திருக்கிறது.
இப்படி வேலையிலிருந்து ஊழியர்களை நீக்குவதற்காக பல்வேறு உத்திகளை கடைப்பிடித்து வந்த எலன் மஸ்க் கையில் எடுத்த இறுதிக்கட்ட நடவடிக்கையானது தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஒரு கஸ்டமைஸ்டு மெயிலை உருவாக்கி , அதனை டிவிட்டரில் வேலைபார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பும் வேலையை மேற்கொண்டிருக்கிறார்.
அதில் டிவிட்டர் 2.0 ஆரம்பிக்க இருப்பதால் இன்னும் அதிகமாய் உழைக்கும் மக்கள் தான் வேண்டும் , விரும்புபவர்கள் வேலை பார்க்கலாம் என குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.
இதில் பல்வேறு கண்டிப்புகள், நீண்ட நேர வேலை நேரம் , வார இறுதி விடுமுறை கிடையாது என்று அதிகபட்ச விதிமுறைகளை உட்புகுத்தி அதற்கு முறைப்படி கருத்துக்கணிப்பையும் நடத்தியிருக்கிறார் எலன் மஸ்க்.
இதன் வாயிலாக சுமார் 45% ஊழியர்கள் எனக்கு இந்த வேலை தேவையில்லை, நான் வெளியே விடுதலை பெற்று செல்கிறேன் என மெயில் செய்து விட்டு சென்றிருக்கிறார்கள். சிலர் மட்டும் அதனை ஏற்று , பணியில் நீடிக்கிறேன் எனவும் சொல்லியிருக்கிறார்கள்
இந்த புள்ளிவிவரம் இன்னும் முழுமையாக கிடைக்காத பட்சத்தில் , வேலையை விட்டவர்கள் ட்விட்டரிலும் பகிர்ந்து வருவதை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக ட்விட்டரின் நிலைமை கவலைக்கிடம் என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
வேலையை விட்ட ஊழியர்கள் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் 1.0 வே எனக்குப் போதும். மகிழ்ச்சியாக விடைபெறுகிறேன் எனவும் ,
நான் ட்விட்டரில் பணிபுரிந்த இத்தனை வருடம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்.தற்போது உங்கள் அனைவரையும் பிரிவதில் கடினமாக இருக்கிறது, மிஸ் செய்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆக ட்விட்டர் பக்கம் போனால் இன்னும் பல சுவாரஸ்யமான அதே சமயத்தில் வருத்தமான ட்விட்களையும் நாம் பார்க்கலாம்.
எலன் மஸ்க்கின் வியூகப் படி ட்விட்டர் மீண்டும் புத்துணர்வு பெற்று டிவிட்டர் 2.0 வருமா? இல்லையென்றால் எலன் மஸ்க் கடைசியாக போட்டிருக்கும் ட்விட் போல் டிவிட்டர் புதைக்கப்படுமா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை தான்.
பவித்ரா பாலசுப்ரமணியன்
பிரியா வழக்கு: முன் ஜாமீன் கேட்கும் மருத்துவர்கள்!
பிரியா மரணம்: வழக்கின் பிரிவுகள் மாற்றம்!