ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் சுமார் 6.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள 7.9 மில்லியன் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்ததை தொடர்ந்து இருதரப்புக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள Tesla பங்குகள் விற்கப்பட்டது. இனி பங்குகளை விற்பனை செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு பின் பல்வேறு காரணங்களுக்காக ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் மஸ்க்.
இதன் காரணமாக அவருக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெலவேர் நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடுத்தார் எலான் மஸ்க்.
டிவிட்டர் நிறுவனம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையானது அக்டோபர் 17ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் சட்ட ஆலோசகர்களுடன் எலான் மஸ்க் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ட்விட்டருக்கு எதிரான வழக்கில் தோல்வி அடையும் பட்சத்தில் ட்விட்டரை வாங்க வேண்டிய நிலை வரும் இல்லையெனில் அதிகப்படியான தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பிறகே ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் சுமார் 6.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள 7.9 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் எலான் மஸ்க் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். தற்போது எலான் மஸ்க் வசம் 155.04 மில்லியன் டெஸ்லா பங்குகள் மட்டுமே உள்ளது.
- க.சீனிவாசன்