இந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக சிக்கன் பிரியாணி செய்ய இந்த செய்முறை உதவும்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி – ஒரு கப்
சிக்கன் – 250 கிராம்
தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 8 (நறுக்கவும்)
புதினா, கொத்தமல்லி – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
எலுமிச்சை – பாதி அளவு (சாறு எடுக்கவும்)
பிரியாணி எசென்ஸ் – அரை டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
அன்னாசிப்பூ – 2
கிராம்பு – 2
பட்டை – 2
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்யவும். அரிசியைக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பெருஞ்சீரகத்தைப் பொடித்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சூடானதும் பிரியாணி இலை சேர்த்து, பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 10 நிமிடங்களுக்குச் சமைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து பிரியாணி எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறி 15 நிமிடங்கள் மூடிவைத்து எடுத்துக் கிளறிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்
கிச்சன் கீர்த்தனா: கானங்கத்த மீன் புட்டு