நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தபால் துறை சார்பில் 10 நாட்களில், 1 கோடி தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதி வரை தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படங்களில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றும் கேட்ட்க்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் கடந்த பத்து நாட்களில் 1 கோடி தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.
ஆன்லைன் வழியாக 1.75 லட்சம் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேசியக்கொடி வாங்குபவர்களுக்கு இலவசமாக அவர்களது வீடு தேடி சென்று, தேசியக்கொடி கொடுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும், 4.2 லட்சம் ஊழியர்கள் தேசியக்கொடி விற்பனைக்கு பங்காற்றியுள்ளனர். கிராமங்கள், நகரங்கள், மலைப்பகுதகள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேசியக்கொடியின் முக்கியத்துவம் குறித்து தபால் துறை ஊழியர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 15 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி வாங்கலாம். அதே போல, epostoffice.gov.in என்ற இணையதளத்திலும் தேசியகொடி வாங்கலாம்.
இந்திய மக்களிடம் தேசப்பற்றை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தபால் துறை தெரிவித்துள்ளது.
செல்வம்