ஒகேனக்கல் சாலையில் ஒற்றை காட்டுயானையை ஆபத்தான முறையில் விரட்ட முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் அவ்வப்போது பென்னாகரம் – ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்பது வழக்கம்.
தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்குக் கோடை விடுமுறையைக் கொண்டாட நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் அடர் வனப்பகுதிக்குள் செல்லும்போது சாலையோரம் யானைகள் நின்று கொண்டிருந்தால் வாகன ஓட்டிகள் நின்று செல்வதும் வழக்கம் தான்.
இதனிடையே இன்று (மே 11) கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை சாலையோரம் நின்றதை கண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று அதனை விரட்ட முயற்சித்தார். அவர் இரண்டு கைகளையும் கூப்பி யானையை அங்கிருந்து செல்லும் படி சொன்னார்.
அந்த யானை அவரை தாக்காமல் மிரண்டு போய் வனத்திற்குள் சென்றது. மதுபோதையில் இருந்த நபர் யானை அருகில் சென்றதைக் கண்ட சக சுற்றுலாப் பயணிகள் அவரை எச்சரித்தனர். அதில் ஒருவர் “யோவ் மீச… திரும்பி வா” என்றும் கூச்சலிட்டு அழைத்தார்.
ஆனால் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் யானை அருகே சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட இணையவாசிகள், யானை ஏதோ நல்ல மூட்-ல இருந்திருக்கு போல, அதனால் தான் போதை ஆசாமியை தாக்காமல் வனத்திற்குள் சென்றுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
முதல்வரின் புகைப்பட கண்காட்சி : தொடங்கி வைத்த எ.வ.வேலு, ஜெயம் ரவி