கர்நாடகாவில் நடைபெறும் மைசூர் தசராவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு தசரா விழாவினை தொடங்கி வைத்தார்.
கர்நாடகாவில் சாமுண்டி மலையில் நாடா ஹப்பா என்ற பெயரில் கொண்டாடப்படும் நவராத்திரி – தசரா திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
விழாவின் போது மைசூர் நகரம் முழுவதும் கண்களைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் யானைகளின் மீது ஊர்வலங்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்குச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தசராவின் முதல் நாள் விழாவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு துவங்கி வைத்து செப்டம்பர் 28 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (செப்டம்பர் 26) திரவுபதி முதல் நாள் விழாவைக் குத்து விளக்கேற்றித் துவங்கி வைத்து விழாவில் கலந்து கொண்டார்.

திரவுபதி முர்முவுடன் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, கன்னடம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சுனில் குமார், கூட்டுறவு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேரில் அலங்கரிக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி சிலைக்கு திர்வுபதி முர்மு மலர் தூவி மரியாதை செய்தார். இந்த தசராவில் வழக்கமான விஷயங்களைத் தாண்டி விழாவை துவக்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கட்டியிருக்கும் பட்டுச் சேலையும் உலக அளவில் பெண்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுவை தசரா விழாவுக்கு அழைப்பதற்காக அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் தலைமையில் மைசூர் மாவட்ட நிர்வாகக் குழுவினர் சில நாட்களுக்கு முன் நேரில் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர்.
அப்போது அவருக்கு மைசூர் பட்டுப் புடவையைப் பரிசளித்து, இந்த புடவையை அணிந்து நீங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோளும் வைத்தனர். அதை ஏற்று திரௌபதி முர்மு அந்த பட்டுப் புடவையை அணிந்து தசரா விழாவில் பங்கேற்றுள்ளார்.
அந்த புடவை சுத்தமான பட்டு இழையால் நெய்யப்பட்டு தங்க ஜரிகை சேர்க்கப்பட்ட புடவை என்று கர்நாடக பட்டுத் தொழில் கழகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஸ்பெஷல்களில் ஒன்றான இந்த மைசூர் பட்டு ஏற்கனவே புகழ் பெற்றது. இப்போது குடியரசுத் தலைவரும் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் மூலம் மேலும் புகழ் பெற்றிருக்கிறது. இணையத்தில் மைசூர் பட்டுச் சேலைகளை பெண்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.

மைசூரில் உள்ள எட்டு இடங்களில் மொத்தம் 290 கலாச்சார நிகழ்ச்சிகள் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளன. இறுதி நாளான , அக்டோபர் 5 ஆம் தேதி, தங்க சிம்மாசனத்தை சுமந்து செல்லும் யானைகளின் ஜம்பூ சவாரி, அதைத் தொடர்ந்து பிரமாண்டமான டார்ச்லைட் அணிவகுப்பும் நடைபெறவுள்ளன.
மோனிஷா
சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!