கோடை வெப்பத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். கொளுத்தும் வெயிலில் பயணிக்க வேண்டிய பணிச்சூழல் உள்ள பெண்கள், சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க, சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் எனப் பலவகை க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர். ஆண்களோ, ‘சருமப் பராமரிப்பா… அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்…’ என அலட்சியமாக இருக்கின்றனர். சருமப் பராமரிப்பு என்பது அழகுடன் ஆரோக்கியத்துக்கும்தான்.
இந்த நிலையில் பெண்கள்… கோடையில் முக்கியமாகத் தவிர்க்க வேண்டியது ஹெவி பவுண்டேஷன். குறிப்பாக, க்ரீம் பவுண்டேஷனை உபயோகித்தால், முகத்தில் அதிகம் வியர்க்கும். இதனால், பவுண்டேஷனுடன் வியர்வை சேர்ந்து, பிசுபிசுப்பை உண்டாக்கும். முகம் எண்ணெய் வழிந்து, பொலிவிழந்து விடும். அதனால், நம் சருமத்துக்கும் சீதோஷ்ணத்துக்கும் பொருத்தமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.
அடுத்து, ரசாயனம் நிறைந்த மஸ்காரா, ஐ ஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இவை வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுப்பதோடு, சருமத்தையும் பாதிக்கும்.
முக்கியமாக, வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும்.
எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கிய, சென்ற ஆண்டு பயன்படுத்திய சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சருமப் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.
இந்தக் கோடை வெப்பம், நாம் பயன்படுத்தும் பாடி ஸ்ப்ரே, பெர்ஃப்யூம், டியோடரன்ட் போன்றவற்றில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி, அதிக நறுமணத்தைப் பெருக்கச் செய்யும். இந்த ரசாயனம் சிலருக்கு சரும அலர்ஜியை உண்டாக்கும். அதனால், அதிக நறுமணம் உள்ளவற்றைத் தவிர்த்து, மெலிதான நறுமணமூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். அதுவும், நேரடியாகச் சருமத்தில் படாத வகையில் பயன்படுத்த வேண்டும்.
சோப்பை அதிகம் பயன்படுத்தினால் , சரும வறட்சி ஏற்படும். பாடி வாஷில் சோடியம் ஹைட்ராக்சைடு குறைவாக உள்ளதால், சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
ஆண்கள்… ஷேவிங் சோப்பு வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, க்ரீம், ஜெல் போன்றவற்றை உபயோகிக்கலாம். கிளிசரின் மற்றும் ஷியா வெண்ணெய் உள்ள க்ரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்துவதால், சரும செல்கள் பாதுகாக்கப்பட்டு, சருமமும் பொலிவோடு இருக்கும்.
ஷேவ் செய்து முடித்ததும், கட்டாயமாக ஆஃப்டர் ஷேவ் லோஷனைப் பயன்படுத்த வேண்டும். இது, ஷேவ் மூலம் தொற்றுகள் ஏற்படாமல் சரிசெய்யும். வைட்டமின் இ நிறைந்த லோஷனா என்பதைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால், முகம் வறட்சியடையாமல் பொலிவாக இருக்கும்.
ஷேவ் செய்ய சாதாரண ரேசர்களைப் பயன்படுத்தாமல், எலெக்ட்ரிக் ரேசர் பயன்படுத்துவதால், கன்னப்பகுதி மிருதுவாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
நைட் க்ரீமை இரவில் தூங்கும் முன் சருமத்தில் தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் சரிசெய்யப்பட்டு, புத்துயிர் பெறும். முகம் பொலிவாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் எப்போது?
செல்வி போட்ட போன்: சிஎம்சி விரைந்த ஸ்டாலின்… எப்படி இருக்கிறார் துரை தயாநிதி?
‘மாயா ஒன்’: சூப்பர் ஹீரோவா சந்தீப் கிஷன்?