உடல் எடையைக் குறைக்க, ஆரோக்கியமாக வாழ என ஏதாவது காரணத்துக்காக, உணவிலிருந்து கிடைக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவோம். இந்த நிலையில், கலோரிகளை வேகமாக எரிப்பதற்கு வாக்கிங் அல்லது ஜாகிங் (மெது ஓட்டம்) இரண்டில் எது சிறந்தது? மருத்துவர்கள் அளிக்கும் பதில் என்ன?
“வாக்கிங் (நடைப்பயிற்சி), ஜாகிங் (மெது ஓட்டம்) இவை இரண்டையுமே ‘கார்டியோ வொர்க்அவுட்’ (Cardio Workout) என்பார்கள். அதாவது இதயம், ரத்தநாளங்களை வலுப்படுத்தும் பயிற்சிகள். வாக்கிங், ஜாகிங் இரண்டு பயிற்சிகளுமே உடல் எடையைக் குறைக்க, கலோரிகளை எரிக்க உதவுவதோடு, நுரையீரல் திறனையும் அதிகரிக்கும். தசைகளை வலிமைப்படுத்தும். வாக்கிங், ஜாகிங் எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் தினமும் அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். ஆரோக்கியமானவர்கள் உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒரு மணி நேரமாகக்கூட அதிகரிக்கலாம்.
இந்த நிலையில், வாக்கிங் எல்லாருக்குமே உகந்தது. எந்த வேகத்தில், எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று அவரவருக்குத் தெரியும். அதன் அடிப்படையில் வாக்கிங் சென்றாலே போதுமானது. மூட்டு வலி உள்ளவர்கள், இடுப்புப் பகுதிக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்வதால் எலும்புத் தேய்மானம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், இதயநோய், ஆஸ்துமா, நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் இருந்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்கள் ஜாகிங் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைப்போம்.
உடல்நிலை, வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லும் நேரம், வேகம் இவற்றைப் பொறுத்து எத்தனை கலோரிகள் எரிக்கப்படுவதும் உடல் எடைக் குறைவதும் நபருக்கு நபர் வேறுபடும். மேலும், ஒரு நபர் எங்கு வாக்கிங் செல்கிறார் என்பதைப் பொறுத்தும் கலோரி கரைவது வேறுபடும். உதாரணத்துக்கு, தரையில் நடப்பவர்களைவிட, சாய்தளத்தில் (Ramp) ஏறி இறங்கி பயிற்சி செய்பவர்களுக்கு அதிகமான அளவும், வேகமாகவும் கலோரி எரிக்கப்படும்.
வாக்கிங் பயிற்சியைத் தொடங்கும்போது மெதுவாக நடக்க ஆரம்பிக்க வேண்டும். மெதுவாக வேகத்தை அதிகரித்து, கைகளை வீசி (Brisk Walking) நடக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கலோரிகள் வழக்கத்தைவிட அதிகமாக எரிக்கப்படும். ஜாகிங் செய்வதைவிட இந்த முறையில் நடைப்பயிற்சி செய்தாலே அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
இளைஞர்கள், ஜாகிங் செய்ய முடிந்தவர்கள் முதலில் மெதுவாக வாக்கிங் செய்யத் தொடங்கி, வேகத்தை அதிகரித்து ‘பிரிஸ்க் வாக்கிங்’ ஆக மாற்றி, அப்படியே ஜாகிங் பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியை நிறைவுசெய்யும்போது மீண்டும் வேகத்தைக் குறைத்து, ‘பிரிஸ்க் வாக்கிங்’குக்கு மாறி, நடையின் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து நிறைவு செய்யலாம்.
இதுபோல முறையாக உடற்பயிற்சி செய்யும்போது, கலோரிகளை வேகமாக எரிக்கும் திறன் அடுத்த 24 மணி நேரம் வரை நீடிக்கும். கலோரிகள் குறையும், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும். தினமும் பயிற்சியில் ஈடுபட முடியாதவர்கள், வாரத்தில் மூன்று நாட்களாவது செய்வது நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்
118 ஏக்கர் பரப்பளவில்… பசுமை பூங்கவாக மாறும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்!
செஸ் ஒலிம்பியாட் : முதல்முறையாக இந்தியா தங்கம் வென்று அசத்தல்!
வரலாற்று வெற்றி: இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திஸாநாயக்க