சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாக உத்தரவாதம் தரும் வீடியோக்கள், செய்திகளை சோஷியல் மீடியாவில் அதிகம் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று… வெண்டைக்காய்களைக் கீறி, ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்பது. இது எந்த அளவுக்கு உண்மை? சித்த மருத்துவர்களின் பதில் இதோ…
“சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். அந்த வகையில் அவர்கள் வெண்டைக்காய் எடுத்துக்கொள்வது நல்லதுதான்.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் வெண்டைக்காய் உதவும். அதற்காக வெறும் வெண்டைக்காய் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என நினைத்து அதை மட்டுமே பின்பற்றுவது நிச்சயம் தவறானது.
வெண்டைக்காயை ஊறவைத்த நீரை மட்டும் குடிப்பது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு ஆய்வுபூர்வ நிரூபணங்கள் இல்லை. இப்படி வெறும் நீரைக் குடிப்பதற்குப் பதில் வெண்டைக்காயை பொரியலாகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடுவதுதான் அதிக பலன்களைத் தரும்.
வெண்டைக்காயை ஊறவைத்த நீரைக் குடிப்பதைவிடவும், வெந்தயம் ஊறவைத்த நீரைக் குடிப்பது ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதைப் பல ஆய்வுக் கட்டுரைகளும் குறிப்பிட்டுள்ளன.
பலரும் சமூக ஊடகங்களில் வலம்வரும் இது போன்ற வீடியோக்களை, தகவல்களை நம்பி, அவற்றை மட்டுமே பின்பற்றுகிறார்கள். ரத்தச் சர்க்கரை அளவைக்கூட டெஸ்ட் செய்து பார்க்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். அது தவறு.
அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முறையான சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துரைமுருகன் இதயம் எப்படி இருக்கிறது? சிங்கப்பூர் டாக்டர் ரிப்போர்ட்!
‘கோட்’ டிக்கெட் 1000 ரூபாயா? தவிக்கும் விஜய் ரசிகர்கள்!