மத்தியபிரேதசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சேவல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்தியப் பிரேதச மாநிலம் இந்தூரில் பாலசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகில் வசித்து வருகிறார் புற்றுநோயியல் மருத்துவர் அலோக் மோடி. இவர் தினமும் இரவு பணிபுரிந்து விட்டு காலையில் வீட்டிற்கு வந்து உறங்குவது வழக்கம்.
ஆனால் அலோக் உறங்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வரும் சேவல் கூவுவது தொந்தரவாக இருந்து வந்துள்ளது. இதனால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட, அலோக் மோடி இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரரிடமும் கூறியுள்ளார்.
அதோடு சேவல் கூவுவதால், தூக்கமின்றி எரிச்சலடைந்த மருத்துவர் பாலசியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “எனது பக்கத்து வீட்டில் உள்ள பெண் தனது வீட்டில் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.
அவர் வளர்த்து வரும் கோழிகள் தினமும் அதிகாலை தவறாமல் 5 மணிக்குக் கூவுகிறது.
இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு, காலையில் உறங்கச் சென்றால், இந்த சேவலால் என் தூக்கமே போய்விடுகிறது. அது முற்றிலும் எரிச்சலாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
அலோக் மோடியின் புகாரைக் காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் பெற்றுக் கொண்டு கூறியதாவது,
”இந்த புகாரின் அடிப்படையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
இதில், சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலைத் தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம், பொது இடத்தில் சட்டவிரோதமாகத் தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133-ன் படி நடவடிக்கை எடுப்போம்” என்று சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
சேவல் கூவுவதற்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருப்பது மக்களிடத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
“ஜல்லிக்கட்டு பாக்க வாங்க” : நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!
”காமெடியன்ஸ்லாம் தூரமா போங்க”: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லர்!