பர்சனாலிட்டியை வெளிப்படுத்துவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். பார்த்துப் பார்த்து கூந்தலை வளர்ப்பது, பெண்களுக்கு சிறு வயதுப் பழக்கமாகக் கற்பிக்கப்படுகிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. அவர்கள், தலைமுடி பராமரிப்பில் பல தவறுகளைச் செய்கிறார்கள். அதனால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்தத் தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா எனப் பாருங்கள். ஆம் எனில், அவற்றை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், அண்ணன்கள் அங்கிள் லுக்கிலும், அங்கிள்கள் கிராண்ட் ஃபாதர் லுக்கிலும் வலம்வர நேரிடும்.
1. ஆண்கள் தலைக்குக் குளிக்கும்போது, அழுக்குப் போக வேண்டும் என்பதற்காக விரல்களால் நன்கு தேய்ப்பர். அதேபோல, குளித்த பிறகும் துணியால் அழுத்தித் தேய்ப்பர். இப்படி ஈரமான முடியைக் கடினமாகத் தேய்த்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும். அதனால், எப்போதும் ஈரமான தலையைக் கடினமாகத் தேய்ப்பதைத் தவிருங்கள். அதேபோல, நிறைய ஆண்கள் சீக்கிரம் குளிக்கிறேன் என்ற பெயரில், தலைக்கு ஷாம்பு போட்டு நீரில் சரியாக அலசாமல், நுரை போகும் அளவில் மட்டும் தலையை அலசிவிட்டு வருவார்கள். இந்தப் பழக்கம் இப்படியே நீடித்தால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் படிந்து, ஆரோக்கியமான முடிக்கு ஆப்பு வைத்துவிடும்.
2. முன்பெல்லாம் கடலை மாவு, அரப்பு மாவு போன்றவற்றை தான் தலையில் தேய்த்துக் குளிப்பார்கள். ஆனால் இன்று, அந்தப் பழக்கமே காணாமல் போய்விட்டது. எக்கச்சக்கமான குளியல் ஷாம்புகள் கடைகளில் கிடைப்பதாலும், பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாலும் அதைத்தான் எல்லோரும் தேர்வு செய்கிறோம். பரவாயில்லை. ஆனால், அதைப் பயன்படுத்துவதில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு எதுவாக இருந்தாலும், அதைத் தலையில் நேரடியாகத் தேய்க்காமல், சிறிய கிண்ணத்தில் ஊற்றி நீரோடு கலக்கிய பிறகு பயன்படுத்துங்கள். இதனால் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல், மயிர்க்கால்களைப் பாதிக்காமல் இருக்கும்.
3. ஸ்டைலான தோற்றத்துக்காக, ஆண்கள் தினமும் தலைக்குக் குளிப்பர். ஆண்களின் முடி அளவு குறைவு என்பதும், எளிதாக உலர்த்தலாம் என்பதும்கூட அதற்குக் காரணங்களாக இருக்கலாம். இப்படித் தினமும் தலைக்குக் குளிப்பதால், ஸ்கால்ப்பில் உள்ள ஈரப்பசை முற்றிலும் வெளியேறி, அதிக வறட்சியைச் சந்திக்கும். இது இப்படியே தொடரும்பட்சத்தில், தலை இருக்கும். ஆனால், முடி இருக்காது.
4. ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு ஹேர் ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, கண்ட கண்ட பொருட்களைத் தலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
5. ஒருசில ஆண்களைப் பார்த்தால், போனும் கையுமாக இருப்பதைவிட சீப்பும் கையுமாகவே திரிவார்கள். எப்போதும் தலையை சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார்கள். இது, முகத்தின் தோற்றத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், முடிக்கு நல்லதல்ல. சீப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும், முடி பாதிப்புக்குள்ளாகி உதிர ஆரம்பிக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஓரிரண்டு முறைக்குமேல் சீப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமெனில், விரல்களால் அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். தலைக்குக் குளிப்பதற்கு முன்பு சீப்பினால் முடியைத் திருத்தம் செய்துகொள்வது, குளிக்கும்போது முடி உதிர்வதைத் தடுக்கும்.
முக்கியமாக… மன அழுத்தம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலே, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கும். அதிலும் நீங்கள் முடி கொட்டுகிறது என நினைத்து அதிகம் வருந்தினால், அது மேலும் முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே, வருந்துவதைத் தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட்டு, மனதை அமைதிப்படுத்துங்கள். முடி கொட்டுவது தானாகவே நின்றுவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்