பொதுவாக அனைத்து உணவுப் பொருட்களிலுமே உப்பு இருக்கும். கீரைகளைச் சமைக்கும்போது உப்பு இருப்பதை உணர முடியும். இயல்பாக நாம் சேர்க்கும் அளவு உப்பு சேர்த்தால்கூட அதிகமாக உப்புச்சுவை தெரியும். உணவுப்பொருட்கள் விளையும் மண்ணில் உப்பு இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், இறைச்சி, முட்டை என அனைத்திலும் உப்பு இருக்கும்.
அந்தச் சுவையிலேயே சாப்பிடப் பழகிக்கொள்வது நல்லது. நாம் சமைக்கும்போது கூடுதல் உப்பைச் சேர்க்கிறோம். உணவைப் பாதுகாப்பதற்கும் பதப்படுத்துவதற்கும் சர்க்கரை, உப்பு ஆகிய இரண்டும்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே உடலுக்கு உகந்தவை இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் தவிர்த்துவிட்டாலே உப்பு பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு நபர் 5 கிராம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 8 முதல் 11 கிராம் வரை உப்பு சேர்த்துக்கொள்கின்றனர்.
ஒரு வீட்டில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்றால் ஆளுக்கு 5 கிராம் என அளந்து மொத்தமாக 15 கிராம் உப்பை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அன்றைய தினம் செய்யும் சமையலை அந்தக் கிண்ணத்தில் இருக்கும் உப்பை மட்டுமே பயன்படுத்தி முடிக்க வேண்டும். ஆரம்பத்தில் இதுபோல அளந்து வைத்துப் பயன்படுத்தினால் நாளாக ஆக இயல்பாகவே உப்பு பயன்பாடு குறைந்துவிடும்.
சாப்பாட்டு மேஜையில் உப்பு டப்பாவை வைக்காதீர்கள். உணவில் சிறிதளவு உப்புச்சுவை குறைந்தாலும் கூடுதல் உப்பை சேர்த்துக்கொள்ள கைகள் தானாக உப்பு டப்பாவை நோக்கிச் செல்லும். தயிர் சாதம், சூப் போன்றவற்றுக்கு கூடுதல் உப்பு சேர்க்க வேண்டாம். ஊறுகாய், சிப்ஸ், அப்பளம், பாப்கார்ன், கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிக உப்பு, எண்ணெய் சேர்த்து ஊறுகாய் தயாரிப்பதைவிட, அந்தக் காய்கறிகளை வினிகரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். பாரம்பர்யமாக உப்பு அதிகமாகச் சேர்த்துச் செய்யும் ஊறுகாய்தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அன்றைய தினம் சாப்பிடும் பிற உணவுகளில் உப்பு சேர்ப்பதைத் தவிர்த்துவிடலாம்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடும் சூழல் இருந்தால், உணவின் லேபிளைப் பரிசோதிக்க வேண்டும். குறைவான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் உணவுப் பொருளைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம். உப்பின் அளவு 140 மில்லி கிராம் என்று லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது குறைவான அளவு என்று எடுத்துக்கொள்ளலாம். 400 மில்லி கிராம் உப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது மிக அதிகம் என்று அர்த்தம். அதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
பிறந்த குழந்தைக்கு உப்பு, காரம், இனிப்பு என எந்தச் சுவையும் தெரிவதில்லை. நாம்தான் அவற்றைப் பழக்குகிறோம். எனவே, சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இனிப்பும் உப்பும் குறைவாகச் சேர்த்துக்கொள்ளும்படி பழக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாக் அடிக்குது… ஷாக் அடிக்குது: அப்டேட் குமாரு
திருவாரூர்: பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… மா.செ மீது வழக்கு!
டிஜிட்டல் திண்ணை: பங்குச்சந்தை கடும் சரிவு… மோடி ஷாக்! ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி?
தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்குத் தடை!