‘ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும்’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு.
குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள் பார்ப்பதற்கு கண்ணைப் பறிப்பதோடு, நாவூற வைக்கும் சுவையிலும் இருப்பதால் உணவுப் பிரியர்களின் விருப்பப் பட்டியலில் ஊறுகாய்க்குப் பிரதான இடம் உண்டு.
ஆனால், “இப்படி நாம் சாப்பிடும் ஊறுகாய், உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது ஒருபுறமிருக்க, அவை உண்மையில் ஊறுகாயே கிடையாது.
ஊறுகாய் என்றால், அதற்கு உயிர் இருக்க வேண்டும். உயிருடன் இருந்தால் மட்டுமே அது உடல் ஆரோக்கியத்தைக் காக்கும்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
“பொதுவாக, ஊறுகாயில் உப்பும் எண்ணெயும் அதிகமாக இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் ஊறுகாய் உடலுக்கு நல்லது செய்யும்” என்கிறார்கள்.
மேலும், “உயிருள்ள ஊறுகாயில் உள்ள விதைகள் முளைக்கும். எடுத்துக்காட்டாக, எலுமிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சைப் பழங்களை விதையுடன் நறுக்கி, ஊறுகாயாகப் போட்டு அதைச் சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஊறுகாயைச் சாப்பிட்டு அந்த விதையை எடுத்து மண்ணில் போட்டால், அது முளைக்கும்.
அப்படி உயிர்ப்புடன் இருக்கும் ஊறுகாய்தான் உடலுக்கு நல்லது. அதை விட்டுவிட்டு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எலுமிச்சைப் பழங்களைப் போட்டு, நன்கு வதக்கி, ஊறுகாயாகப் போட்டால் அதிலிருக்கும் விதைகள் முளைக்காது.
அதுமட்டுமல்லாமல் பழங்களை உயிர்ப்புடன் வைத்து ஊறுகாய் போடுவதுதான் நம்முடைய முறை. அந்த முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய்தான் நம் ஆரோக்கியம் காக்கும்” என்பவர்கள் உயிருள்ள ஊறுகாய் போடுவதற்கான செய்முறையை விளக்குகிறார்கள்.
எலுமிச்சையை எட்டு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி, குறுக்குவாட்டில் நறுக்கி, அதை எலுமிச்சைத் துண்டுகளுடன் சேர்த்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர், எலுமிச்சை, இஞ்சி போன்றவற்றை நாம் எந்த அளவுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல இந்து உப்பையோ, கல் உப்பையோ அவற்றுடன் சேர்க்கவும். இதை வெயிலில் வைத்து வைத்து எடுக்கவும்.
இந்தப் பக்குவப்படி ஊறுகாயைத் தயாரித்து வைத்துக்கொண்டால்… மோர் சாதத்துக்கு ஓர் எலுமிச்சை, இஞ்சித் துண்டைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். உடலுக்கு நன்மை செய்யக்கூடியது இது.
மேற்சொன்ன முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஓர் அருமையான புரோ பயாடிக் ஆகச் செயல்படும்.
இந்த முறையில் ஜாதிக்காய், நார்த்தங்காய் போன்றவற்றையும் ஊறுகாயாகச் செய்யலாம். இவற்றை விட்டுவிட்டு காய்களை சூடான எண்ணெயில் வதக்கி, செயற்கை நிறமிகளைச் சேர்த்து, ஊறுகாயாகத் தயாரித்து அதை பாட்டிலில் அடைத்து வைத்தால்…
அது உயிருள்ள ஊறுகாய் கிடையாது. அது நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்தவிதத்திலும் உதவாது’’ என்று பழைய பாதையை மீண்டும் நினைவூட்டுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!
கிச்சன் கீர்த்தனா: கேரட் ஃப்ரைஸ்!
இந்த நல்ல ஐடியாவா இருக்கே: அப்டேட் குமாரு
எம். ஜி. ஆர் ரசிகராக கார்த்தி… படத்தின் டைட்டில் இதோ!
மோடி தெய்வமகன் கிடையாது: அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பிரகாஷ்ராஜ் விளாசல்!