தூக்கத்திலும், சிலர் விழித்திருக்கும் நேரத்திலும் பற்களை முன்னும் பின்னுமாகத் தேய்க்கிற மாதிரி கடிப்பார்கள்.
பற்களைக் கடித்துக்கொண்டே இருப்பது, மேல் பற்களையும், கீழ் பற்களையும் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டே இருப்பது என இந்தப் பிரச்சினையை ‘ப்ரக்ஸிசம்’ (Bruxism) என்று சொல்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
“தாடையோடு இணைக்கப்பட்டுள்ள தசைகள், அதாவது நாம் பேசவும், உணவை மெல்லவும் பயன்படுத்துகிற தசைகள் ஹைப்பர் ஆக்டிவ்வாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இள வயதினரிடம் அதிகம் காணப்படுகிற இந்தப் பழக்கம், 40 ப்ளஸ்ஸில் ஓரளவு குறையத் தொடங்கும். 60 ப்ளஸ்ஸில் அதைவிடவும் குறையத் தொடங்கும்.
மரபியல், குழந்தைப் பருவத்தில் சந்தித்த ஏதேனும் அதிர்ச்சி சம்பவங்கள், குழந்தைப் பருவ ஸ்ட்ரெஸ், பார்க்கின்சன்ஸ், செரிப்ரல் பால்சி உள்ளிட்ட மனநல பாதிப்புகள் உள்ளோர் போன்றோருக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.
சிலருக்கு மூக்கின் உள்ளே உள்ள எலும்பு வளைந்திருப்பதால் மூச்சுக்குழாயின் அளவு சின்னதாக இருக்கலாம். அப்படி இருப்பவர்களுக்கு தூக்கத்தில் தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் பற்களைக் கடிக்கும் பிரச்சினையும் இருக்கும்.
ஸட்ரெஸ், பதற்றம், மன அழுத்தம் என மனரீதியான காரணங்களாலும் பற்களைக் கடிக்கும் வழக்கம் வரலாம். புகைப்பழக்கம் உள்ளவர்கள், போதைப்பொருள் பயன்பாடு, அதிக அமிலத்தன்மையுள்ள பானங்கள் அடிக்கடி குடிப்பவர்கள் போன்றோருக்கும் வரலாம்.
தொடர்ந்து பல காலமாக இப்படிப் பற்களைக் கடிக்கும் பழக்கம் தொடர்ந்தால், பற்கள் ஒன்றோடு ஒன்று உரசி, பற்களின் மேல் லேயர் தேயும். பற்கள் தட்டையாக மாறும். அது தோற்றத்தையும் பாதிக்கும்.
பற்கள் தேயத்தேய எல்லா உணவுகளையும் கடித்துச் சாப்பிடவோ, மெல்லவோ முடியாது. பற்களைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்கள் பாதிக்கப்படும்” என்று கூறும் மருத்துவர்கள், இதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறார்கள்…
“ஸ்ட்ரெஸ், பதற்றம், மன அழுத்தம் போன்றவைதான் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று தெரிந்தால், அவற்றைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, ரிலாக்ஸேஷன் பயிற்சிகள், தியானம் போன்றவை பரிந்துரைக்கப்படும்.
மன அழுத்தம் குறைக்க சிலருக்கு சிகிச்சைகள் தேவைப்படும். தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பற்களைக் கடிக்கிறார்கள் என்றால், அதற்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அடிப்படை.
மருத்துவரின் பரிந்துரையோடு மவுத் கார்டு எனப்படும் கருவியை பற்களின் மேல் பொருத்திக் கொள்ளலாம். அவை பற்கள் உராய்வதைத் தடுக்கும்.
அமிலத்தன்மையுள்ள உணவுகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். இடது பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.
நெஞ்செரிச்சல், உணவு எதுக்களித்தல் பிரச்சினைகளுக்கு அதற்கான மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுப்பதன் மூலம் பற்களைக் கடிக்கும் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : முளைகட்டிய கொள்ளு காய்கறி சாலட்
“கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழப்பு” அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: மருத்துவமனை விரைந்த அமைச்சர்கள்!