பிரபல பாடகர் எட் ஷீரன் பெங்களூருவில் அனுமதி இன்றி பாடியதாக கூறி, போலீசார் மைக் கனெக்சனை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. disrespect to Ed Sheeran
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரான எட் ஷீரன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றுள்ளார் எட் ஷீரன். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அவர் பெங்களூரு சர்ச் சாலையோரமாக இன்று கிட்டாருடன் மைக்கில் தனது பிரபல பாடலான ‘ஷேப் ஆஃப் யூ’ பாடலை திடீரென பாடத் தொடங்கினார்.
அவரது பாடலைக்கேட்டு அப்பகுதியில் ரசிகர்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், உரிய அனுமதி பெறவில்லை என கூறி அவரது மைக் இணைப்பைத் துண்டித்தனர். இதனால் ஷீரன் மற்றும் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ’எட் ஷீரன் யார் என்று தெரியாமல் போலீசார் மைக் இணைப்பை துண்டித்து அவமரியாதை செய்து விட்டனர். இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெங்களூரு எம்.பி மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஷேப் ஆஃப் யூ… ஆனால் அனுமதி இல்லை. சர்ச் ஸ்ட்ரீட்டில் எட் ஷீரனின் எதிர்பாராத நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லாததை கண்டு பெங்களூரு போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்த சம்பவம் கசப்பானதாக மாறியுள்ளது. உலகளாவிய நட்சத்திரங்கள் கூட உள்ளூர் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அனுமதி இல்லையென்றால், நிகழ்ச்சி இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.