பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

டிரெண்டிங்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பட்ஜெட்டின் சிறப்பான அம்சமாக இது பார்க்கப்படுகிற சூழ்நிலையில் பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்குகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

பட்ஜெட் என்று வரும்போது, சம்பளம் பெறும் வகுப்பினர் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்பாக வருமான வரி தள்ளுபடி உள்ளது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் இன்று சமர்பிக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் அடுக்குகளை மாற்றி அமைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பின் படி தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரையும் வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளாது.

பழைய வருமான வரி அடுக்கு

தனிநபர் ஆண்டு வருமான வரி விலக்கு கடைசியாக 2014ம் ஆண்டு திருத்தப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் 4 அடுக்குகளாக இருந்த வருமான வரி அடுக்கில் 6 அடுக்குகளாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றம் கொண்டுவந்தார்.

அதன்படி 2020ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட வரி அடுக்கின்படி வருமானம் 2.5 லட்ச ரூபாய் வரை இருந்தால் வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரி,
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை 10% வரி,
ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15% வரி,
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை 20% வரி,
ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25% வரி,
ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி விதிக்கப்படுகிறது.

difference between old and new income tax slabs

புதிய வருமான வரி அடுக்கு

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு 6 அடுக்குகளாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அது தற்போது 5 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனை “வரி கட்டமைப்பை மாற்ற நான் முன்மொழிகிறேன், அடுக்குகளின் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்து, வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்துகிறேன்,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதன்படி ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி,
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரி,
ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி,
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி,
ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி விதிக்கப்படும்.

புதிய வருமான வரி அடுக்கின்படி, 9 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் ரூ.45 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 7 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் 3 லட்சம் ரூபாயில் இருந்து வரி கட்ட வேண்டும்.

உதாரணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒருவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகிதமும், 6 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் 9 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்ச ரூபாய் வரை 15 ஆயிரம் ரூபாயும், 6 லட்ச ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாய் வரை 10 சதவிகிதம் என்ற அளவில் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் உரிமை

புதிய வருமான வரி அடுக்கினை அறிமுகப்படுத்தினாலும், இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய உரிமை வரி செலுத்துவோரிடமே இருக்கும்.

வருமான வரி தாக்கலின் போது புதிய நடைமுறையா? அல்லது பழைய நடைமுறையைத் தொடர்வதா? என்பதை வரி செலுத்துபவர் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யாவிட்டால் தாமாகவே அது புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறிவிடும்.

மாறாக பழைய வருமான வரி அடுக்கினை தொடர விரும்பினால், வரி செலுத்துபவர் அதனை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

கிறிஸ்டோபர் ஜெமா

மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

பட்ஜெட்டில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து: எச்சரிக்கும் ஸ்டாலின்

+1
0
+1
3
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *