2022 ஆம் ஆண்டில் 3,330 முறை உணவு ஆர்டர் செய்த நபருக்கு சொமேட்டோ நிறுவனம் ’தேசத்தின் பெரிய உணவு பிரியர்’ என்று பெருமைப் படுத்தியுள்ளது.
தற்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் அனைவரிடமும் அதிகரித்து விட்டது. இதனால் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது ஆண்டு அறிக்கையில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள், அதிகமாக உணவு ஆர்டர் செய்த நபர் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் அவர்களது உணவு டெலிவரி ஆப் மூலம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், சிக்கன் பிரியாணி தான் முதல் இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொமேட்டோ ஆப் மூலம் ஒரு நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரியாணியைத் தொடர்ந்து பிட்சா, மசாலா தோசை, வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன், பட்டர்நான் போன்ற உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர் ஒரு நாளைக்கு 9 ஆர்டர் என 2022 ஆம் ஆண்டு முழுவதும் 3,330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளதாக சொமேட்டோ தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு அதிகமாக உணவு ஆர்டர் செய்த நபர் என்றும் அவருக்குத் தேசத்தின் பெரிய உணவு பிரியர் என்ற பட்டத்தையும் சொமேட்டோ வழங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஸ்விக்கி நிறுவனம் தங்களது ஆப் மூலம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் சிக்கன் பிரியாணி தொடர்ந்து 7வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பதாகவும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
நீங்க எந்த சேனல்? – சிரித்துக்கொண்டே கோபப்பட்ட ஓபிஎஸ்
மகனுக்கு நிச்சயதார்த்தம்: அம்பானி வீட்டில் குவிந்த பிரபலங்கள்!