”ஹாக்ரிட் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்”: ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு ஹாரிபாட்டர் இரங்கல்!

டிரெண்டிங்

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபி கோல்ட்ரேன் நேற்று ( அக்டோபர் 14) உயிரிழந்ததை அடுத்து சர்வதேச திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹாரிபாட்டர் திரைப்படங்களில் “ஹாக்வார்ட்ஸ் கேம்கீப்பர் ரூபியஸ் ஹாக்ரிட்” (Hagrid)என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் அறியப்பட்டவர் நடிகர் ராபி கோல்ட்ரேன்.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் தனது 72வது வயதில் உடல் நல குறைவு காரணமாக நேற்று காலமானார்.

1950 ஆண்டு ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவிற்கு அருகே ரூதர்க்லனில் ராபி கோல்ட்ரேன் பிறந்தார். ஒரு நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையை தகவமைத்து கொண்டார்.

புகழ்பெற்ற ​​”கிராக்கர்” (1993-2006) தொடரில் கடின குடிப்பழக்கம் உள்ள கிரிமினல் உளவியலாளர் டாக்டர் எடி “ஃபிட்ஸ்” ஃபிட்ஸ்ஜெரால்டின் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்தார். அது கோல்ட்ரேனை பலருக்கும் அடையாளம் காட்டியதோடு, பல உயரிய விருதுகளையும் அவருக்கு பெற்று கொடுத்தது.

Daniel Radcliffe and JK Rowling shared heartfelt tributes Coltrane

அதனை தொடர்ந்து திரையுலகில் தொடர்ந்து வலம் வந்த அவர், ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ஹாக்ரிட் கதாப்பாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிலையில் அவரது மறைவையொட்டி ஹாரி பாட்டராக நடித்த பிரிட்டிஷ் நடிகர் டேனியல் ராட்க்ளிஃப் மற்றும் ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிய ஜே.கே. ரௌலிங் ஆகியோர் மறைந்த கோல்ட்ரேனை நினைவுகூர்ந்து இதயப்பூர்வமான அஞ்சலிகளைப் பகிர்ந்துள்ளனர்.

Daniel Radcliffe and JK Rowling shared heartfelt tributes Coltrane

சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்!

ராட்கிளிஃப் கூறுகையில், “நான் சந்தித்த வேடிக்கையான நபர்களில் ராபியும் ஒருவர், படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார்.

’ப்ரிஸனர் ஆஃப் அஸ்கபன்’ படப்பிடிப்பில், ஹக்ரிட்டின் குடிசையில் நாங்கள் பல மணிநேரம் பெய்த மழையால் தவித்தபோது, ​​​​அவர் எங்களை உற்சாகப்படுத்த, கதைகள் மற்றும் நகைச்சுவைகளை விவரித்த தருணத்தை வெகுவாக ரசித்தேன்.

அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன். மேலும் அவர் மறைந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் ஒரு நம்பமுடியாத நடிகர் மற்றும் அழகான மனிதர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோல்ட்ரேனும் ராட்க்ளிஃப்பும் 2001 இல் ‘சோர்சரர்ஸ் ஸ்டோன்’ முதல் 2011ல் வெளிவந்த ‘டெத் ஹாலோஸ் – பார்ட் 2’ வரை எட்டு ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்களிலும் ஒன்றாக நடித்தனர்.

Daniel Radcliffe and JK Rowling shared heartfelt tributes Coltrane

கோல்ட்ரேன் ஒரு அபாரமான திறமைசாலி!

ஹாரிபாட்டர் திரைப்பட கதையாசிரியர் ஜே.கே. ரெளலிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராபியைப் போல யாரையும் நான் இனி ஒருபோதும் அறியமாட்டேன். அவர் ஒரு அபாரமான திறமைசாலி. ஒரு முழுமையான தனித்தன்மை வாய்ந்தவர்.

அவருடைய குடும்பத்தாருக்கும், எல்லா குழந்தைகளுக்கும் எனது அன்பையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் கோல்ட்ரேன்!

ஹாரிபாட்டர் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களிலும் கோல்ட்ரேன் நடித்துள்ளார்.

பியர்ஸ் ப்ரோஸ்னனுடன் “கோல்டேன் ஐ” (1995) மற்றும் “தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்” (1999) என்ற 2 இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரஷ்ய மாஃபியா தலைவனாக நடித்துள்ளார்.

Daniel Radcliffe and JK Rowling shared heartfelt tributes Coltrane

உலகிற்கு ஒரு சோகமான இழப்பு!

அதிகாரப்பூர்வ ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் கணக்கில், “ராபி கோல்ட்ரேனின் மறைவு உலகிற்கு ஒரு சோகமான இழப்பு. அவர் ஒரு விதிவிலக்கான நடிகர். அவருடைய திறமைக்கு எல்லையே இல்லை.

கோல்டெனியில் வாலண்டைன் ஜூகோவ்ஸ்கியாக பாண்ட் பார்வையாளர்களுக்கும், அவரது மில்லியன் கணக்கானவர்களுக்கும் பிரியமானவர்.

நாங்கள் ஒரு அன்பான நண்பரை இழந்துள்ளோம். அமைதியில் இளைப்பாருங்கள் ராபி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daniel Radcliffe and JK Rowling shared heartfelt tributes Coltrane

ராபி கோல்ட்ரேனின் மரணம் குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், கோல்ட்ரேனின் குடும்பத்தினர் லார்பர்ட்டில் உள்ள ஃபோர்த் வேலி ராயல் மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவினரின் கவனிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ராபி கோல்ட்ரேன் மறைவிற்கு சர்வதேச திரை பிரபலங்கள் மற்றும் உலக ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜெய்பீமை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா!

யார் அந்த திருவள்ளுவர் !?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *