கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஜடேஜாவை முதல் பந்திலேயே அவுட்டாக சொல்லி பதாகையை ஏந்தியிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று (ஏப்ரல் 23) இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால் சென்னை அணி பேட்டிங்கிற்கு களமிறங்கியது.
சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். இது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது.
ஆனால் மற்றொரு புறம் சென்னை அணியின் வீரர்களின் இந்த அதிரடி ஆட்டம் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு வருத்தத்தையும் அளித்திருந்தது.
காரணம் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 6வது விக்கெட்டிற்கு தான் பேட்டிங்கிற்கு களமிறங்குவார்.
சென்னை அணியின் ஆட்டத்தைக் காண வரும் ரசிகர்களை விட தோனியின் பேட்டிங்கை பார்க்க வரும் ரசிகர்களே மைதானத்தில் அதிகமாக இருப்பர். குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிதான் தனது கடைசி ஐபிஎல் போட்டி என்று தோனி கூறியதும் இதற்கு ஒரு காரணம்.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்தனர். தொடர்ந்து 5வது விக்கெட்டிற்கு ஜடேஜா களமிறங்கினார்.
அப்போது மைதானத்தில் அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ”jaddu can u please lose your Wicket on first Ball we want to see mahi” என்ற எழுதப்பட்டிருந்த ஒரு பதாகையுடன் எழுந்து நின்றார்.
தோனியை காண்பதற்காக முதல் பந்திலேயே ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர் ஏந்தியிருந்த பதாகையின் புகைப்படம் இணையத்தில் பரவ தொடங்கியது.
இதனைக் கண்ட இணைய வாசிகள் பலர், தான் ஆதரவு தெரிவிக்கும் அணியின் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டும் தான். காரணம் தோனி” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ”ரசிகரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஜடேஜா வெறும் 18 ரன்களில் ஆட்டமிழ்ந்துள்ளார்” என்றும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் விளையாடும் கொல்கத்தா அணியின் ரசிகர்களை விட சென்னை அணியின் ரசிகர்கள் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டனர்.
மோனிஷா
IPL 2023: அரைசதங்கள் அடித்து அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்திய சிஎஸ்கே!
ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!