இங்கிலாந்து நாட்டில் நாய் ஒன்று தனது உரிமையாளரை கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ரோஸி என்று பெயரிடப்பட்ட பார்டர் கோலி வகையைச் சேர்ந்த நாய் ஒன்று பர்மிங்காமிலிருந்து தென்கிழக்கே 43 மைல் தொலைவில் உள்ள லாஃப்ஸ்பரோவில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
கறுப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள அந்த நாய், காவல்நிலையத்தில் தானியங்கி கதவுகள் திறந்த உடன் உள்ளே நுழைந்து, அங்கும் இங்கும் சுற்றிவிட்டு ஒரு இடத்தில் படுத்துக் கொள்கிறது.
இதைக்கண்ட காவலர்கள் அந்த நாய்க்கு சிறிது தண்ணீர் வைத்துவிட்டு, மெல்ல அதனுடன் பழகி அதன் கழுத்தில் அணிந்திருந்த பட்டையை பார்த்து உரிமையாளரை தொடர்பு கொண்டனர்.
அப்போது அதன் உரிமையாளர் ஜூலி ஹார்பர், நவம்பர் 4 ஆம் தேதி சவுத்ஃபீல்ட் பூங்காவில் ரோஸியையும் மற்றொரு நாயையும் வாக்கிங் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு யாரோ ஒருவர் பட்டாசு வெடித்ததால் ரோஸி பயந்து ஓடியிருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக தனது உரிமையாளரிடம் சேர முடியாத ரோஸி கடைசியாக காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்திருக்கிறது. அதன்பிறகு ரோஸியை காவலர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
லீசெஸ்டர்ஷைர் போலீசார், நாய் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து, நாய்கள் எப்போதும் புத்திசாலித்தனமானவை, அன்பானவை என்று புகழ்ந்திருக்கின்றனர். இந்த வீடியோ செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
கலை.ரா
பிசாசு போல வளர்கிறது பிஜேபி: திமுகவினருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!
ராமஜெயம் கொலை: மேலும் 4 ரவுடிகள் ஒப்புதல்!