தாய்ப்பால் இல்லாமல் உயிருக்கு போராடிய ஒரு வயது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிர் காத்த பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சேவாயூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ரம்யா.
கோழிக்கோட்டில் தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வயது குழந்தையை தாயிடமிருந்து தந்தையும் பாட்டியும் எடுத்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து புகார் கிடைத்தவுடன் அந்த தந்தையையும், பாட்டியையும் தேடி கண்டுபிடிப்பதற்குள் பல மணி நேரம் கடந்து விட்டது.
காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட அவர்களிடம் இருந்த ஒரு வயது குழந்தை பல மணி நேரம் தாய்ப்பால் இல்லாத காரணத்தினால் தளர்ந்து போய் காணப்பட்டது.
குழந்தையை பார்த்த அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ரம்யா என்ற பெண் காவலர் உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
இதனால் குழந்தை மீண்டும் புத்துணர்வு பெற்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ரம்யாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் நேரில் வரவழைத்து ரம்யாவை பாராட்டி நற்சான்றிதழ் அளித்தனர். இது குறித்து கூறிய காவலர் ரம்யா, நான் வேறு எதுவும் யோசிக்கவில்லை.
குழந்தை தளர்ந்து காணப்பட்டதால் உடனடியாக சர்க்கரையின் அளவை கூட்ட வேண்டும். குழந்தையின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே நான் யோசித்தேன் என்றார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக தாயிடம் இருந்து பல மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிர் காத்து தனது தாய்மையை வெளிப்படுத்திய பெண் காவலரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கலை.ரா