பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் தூய்மை பணியாளர் உடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பருவமழையின் போது மழை வெள்ளக் காலங்களில் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பாராட்டு விழா இன்று (ஜனவரி 31) நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, “எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன.
ஆனால் அதையெல்லாம் விட தூய்மை பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கலந்து கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
அமைச்சர் கே.என். நேரு ஏற்பாடு செய்த விழா என்றாலே அறுசுவை உணவு நிச்சயம் இருக்கும். ஆகவே இன்று உங்களுடன் இணைந்து நானும் உணவு உண்ணப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

அதன்படி முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அமர்ந்து சாப்பிடுவதற்கு மேசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர், தனக்கு அருகில் ஒரு தூய்மை பணியாளரையும் அமர வைத்துச் சாப்பிட வைத்தார்.
சூப், பிரியாணி, ஐஸ்கிரீம், இனிப்பு என பல்வேறு விதமான உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் தொடங்கி தூய்மை பணியாளர்கள் வரை அனைவருக்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
தூய்மை பணியாளருடன் அமர்ந்து முதலமைச்சர் உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
”ஜெயலலிதா கட்சியவே இங்கு சிலர் ஏலம் விடுறாங்க!” – முதல்வர் ஸ்டாலின்