44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் மாமல்லபுரம் முழுவதும் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது .அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்குள் தனி வரவேற்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா ( ஜூலை 28 ) ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி , ராகுல் காந்தி , மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி.க்கள் நேரில் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் , விஜய் , அஜித் ஆகியோருக்கு ஆல் இந்திய செஸ் அசோசியேஷன் மற்றும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு ஏற்கனவே பல விஐபிகள் வரும் நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் வருகை தருவதாக தகவல் பரவி வருவதால் செஸ் ரசிகர்களோடு சினிமா ரசிகர்களும் மாமல்லபுரத்தை நோக்கி திரள்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்-