நாளை சென்னை வருகை தர உள்ள பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கம்போல் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 60-க்கும் மேற்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் (எஸ்.பி.ஜி.) சென்னையில் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். தொடர்ந்து இரு நாட்கள் பிரதமர் சென்னையில் தங்கி இருப்பதையொட்டி, மாநகரம் முழுவதும் நாளை காலை முதல் நாளை மறுநாள் மாலை வரை 22 ஆயிரம் போலீசார் உட்பட 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

டிரெண்டிங்கில் #GobackModi ஹேஷ்டேக்!
தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக ’கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் டிவிட்டரில் நேற்று இரவு முதல் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் #GobackModi போன்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவது வழக்கம். ஆனால் சென்னைக்கு மோடி நாளை வர உள்ள நிலையில் நேற்று இரவு முதல் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

2018 முதல் தொடரும் எதிர்ப்பு!
2018ம் ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவத் தளவாட கண்காட்சிக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவரது வருகைக்கு அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரித்தன. ஆனால் அதற்கெல்லாம் மேலாக முதன்முறையாக #GobackModi ஹேஷ்டேக் டிவிட்டரில் உலகளவில் டிரெண்டானது. ஒரு நாட்டின் பிரதமருக்கு சமூகவலைத்தளத்தில் விடுக்கப்பட்ட அதிகபட்ச எதிர்ப்பு போராட்டமாக அப்போது அது பார்க்கப்பட்டது.
அது முதல் கடந்த மே மாதம் நடைபெற்ற மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்க விழாவிற்காக சென்னை வந்தது வரை ’கோ பேக் மோடி’ எதிர்ப்பு போராட்டம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது.

காவல் ஆணையர் எச்சரிக்கை!
பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்படுவர் என்றும், பதிவுகளின் தன்மையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா