சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று கொம்பில் முட்டி இழுத்துச்சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி மதுமதி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 16) காலை மதுமதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நின்ற எருமை மாடு அவரை தனது கொம்பால் முட்டி இழுத்துச் சென்றது.
அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாட்டை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரையும் அந்த மாடு வேகமாக தாக்கியுள்ளது.
பின்னர் வெகு நேரத்திற்கு பிறகு மதுமதியை விட்ட மாடு அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளது. மாடு முட்டியதில் காயமடைந்த மதுமதி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, மதுமதியின் இடது தொடை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரை முட்டிய எருமை மாடு பிடிபட்டுள்ள நிலையில், மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரியாமல் உள்ளது.
முன்னதாக, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அதனால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது வரை தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
எம்.சி.ராஜா : சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!