தீபாவளிப் பரிசு என்ற பெயரில் வரும் மெசேஜ்கள் மூலம் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பி உள்ளதாக இந்திய இணையப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
வரும் 24 ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
பண்டிகை காலம் என்பதால் நகரங்களில் ஜவுளிகடைகள், பட்டாசு கடைகள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மெசேஜ்க்குள் ஒளிந்திருக்கும் மால்வேர்!
அதேபோல் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தீபாவளி வாழ்த்து செய்திகள் இப்போது முதலே குவிய துவங்கியுள்ளது.
இந்நிலையில் தான் நாட்டின் முக்கிய இணையப் பாதுகாப்பு நிறுவனமான கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு ( C E R T-In ) முக்கிய எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக செல்போன்களுக்கு லிங்குகளுடன் கூடிய மெசேஜ் அனுப்பி அதன்மூலம் பயனரின் வங்கியில் இருந்து நேரடியாக பணம் கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
அதுவும் தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து, பரிசுகள், சலுகைகள் என்று விதவிதமான பெயர்களில் மொபைல் எண்ணுக்கு போலி லிங்குகள் வர தொடங்கியுள்ளன.
இந்த போலி லிங்குகள் மூலம் அப்பாவி பயனர்கள் குறிவைக்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசையூட்டும் பரிசு விளம்பரங்களுடன் ஆபத்தான வைரஸ்களை சுமந்துகொண்டு வரும் இந்த போலி லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் பயனரின் வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஓ டி பிகள் போன்ற முக்கியமான தரவுகள் திருடப்பட்டு பணம் பறிக்கப்படுகிறது.
இந்த லிங்குகள் மூலம் திறக்கப்படும் இணையதள பக்கங்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்ததே. அவை ( .x y z, .t o p ) நீட்டிப்புகள் உட்பட, பெரும்பாலும் சீன (.cn) டொமைன்கள் சம்பந்தப்பட்ட இணையதள இணைப்புகள் என்று C E R T தெரிவித்துள்ளது.
எப்படி லிங்குகள் பரவுகிறது
பயனர்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பொறியாக, ஒரு பிரபலமான பிராண்டின் இலவச பரிசுகள் அல்லது மக்களை கவரும் பிராண்டில் இருந்து வாழ்த்து செய்திகள் என்ற பெயரில் போலி லிங்குகள் அனுப்பப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில், பரிசுகளை பெறுவதற்கு பயனர்கள் வாட்ஸ்அப் குழுவில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் லிங்கை பகிர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்படித்தான் பலருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் மால்வேர் லிங்குகள் பரவுகிறது என்பதை CERT விளக்கம் தெரிவித்துள்ளது.
தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
எனவே தீபாவளிப் பரிசு என்ற ஆசையை காட்டி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.
இந்த மோசடியில் சிக்கி பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று இந்திய இணையப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க நமக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து!
முடிவுக்கு வரும் தென்காசி வடக்கு திமுக பஞ்சாயத்து! மா. செ. ரெடி!