ஹெல்த் டிப்ஸ்: பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையுமா?

டிரெண்டிங்

எல்லோருடைய உணவிலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் இடம்பெற வேண்டியது அவசியம் என்பதை மருத்துவர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும் வலியுறுத்துவார்கள். இந்த நிலையில், சாப்பிட ஏதுமில்லையா… நேரமும் இல்லையா… ஒரு வாழைப்பழத்தையோ, ஆப்பிளையோ சாப்பிட்டு பசியாறும் நபர்கள் பலர் உண்டு. அந்தப் பழம் இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும் என்பதே காரணம்.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும் சிலர், தினமும் ஒரு வேளையோ, இருவேளைகளோ வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிடும் ‘ஃப்ரூட்டேரியன் டயட்’டை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி வெறும் பழங்களை மட்டுமே பிரதான உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா….   பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையுமா?  வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட்ஸ் சொல்லும் விளக்கம் என்ன?

”ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ், நார்ச்சத்து என எல்லா சத்துகளும் இருப்பதால்  பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பழங்கள் சாப்பிட்டால் பலன் தெரியும். ஆனால், வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டால் தசையிழப்பும் ஏற்படும். ஏனென்றால், பழங்களில் புரதச்சத்து கிடையாது.

எடைக்குறைப்பு என்ற விஷயத்தில் கொழுப்பு மட்டும்தான் கரைக்கப்பட வேண்டுமே தவிர, தசைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்களின் உடலிலும் அதிக கொழுப்பும்  தசை அடர்த்தி குறைவாகவாகவுமே இருக்கும். வயதாக, ஆக இயல்பிலேயே நமக்கு தசைகள் வலுவிழக்கும். அந்த நிலையில் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவது சரியான ஆலோசனையல்ல.

நிறைய பேர் எடையைக் குறைத்திருப்பார்கள். ஆனால், பார்ப்பதற்கு நோயாளி போன்ற தோற்றத்தில் தெரிவார்கள். எடை குறைத்ததை மற்றவர்கள் பாராட்டுவார்கள் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவர்களைப் பார்ப்பவர்களோ, ‘என்னாச்சு உங்களுக்கு… உடம்பு சரியில்லையா’ என துக்கம் விசாரிப்பார்கள்.

அந்த அளவுக்கு முகத்திலும் உடலிலும் தசைகள் தொய்வடைந்து வயதான தோற்றத்தில் தெரிவார்கள். காரணம்,  புரதச்சத்துக் குறைபாடுதான். எனவே, எடையைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைச் சரியாகக் குறைப்பதும் முக்கியம். அதற்கு பேலன்ஸ்டு டயட் அவசியம். என்னதான் பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும் அவை மட்டுமே ஆரோக்கியமானவை என நம்பி அவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வது சரியான தேர்வல்ல.

பழங்கள் சாப்பிட்டால் சிலருக்கு எடை குறையும். அவற்றிலுள்ள இயற்கையான சர்க்கரைச்சத்து காரணமாக சிலருக்கு உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. ‘ஒரு முழு தர்பூசணி பழம் சாப்பிட்டேன். உடம்பு லேசா, எனர்ஜெடிக்கா இருக்கு… வேற எதுவும் சாப்பிடத் தோணலை’ என்று சொல்வோரைப் பார்க்கலாம். அதெல்லாம் மிகவும் தவறானது.

பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரைச்சத்தானது, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, நீரிழிவு உள்ளவர்களும், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்களும் பழங்கள் சாப்பிடுவதில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும்.  சிலர் வெறும் ஆரஞ்சு மட்டும் அல்லது வெறும் திராட்சை மட்டும் என்று சாப்பிடுவார்கள். இவற்றிலுள்ள அதிகபட்ச அமிலத்தன்மை காரணமாக, பற்களின் எனாமல் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு, பிசிஓடி போன்ற பிரச்சினைகள் இல்லாதவர்கள் தினமும் பழம் சாப்பிடலாம். சிறிய வாழைப்பழம், ஆப்பிள், அதிக இனிப்பில்லாத பப்பாளி, கொய்யாக்காய், ஆரஞ்சு போன்றவற்றை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். மாம்பழம், பலாப்பழம் போன்ற அதிக இனிப்புள்ள பழங்களை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் சரியானது. யாருக்கோ பலனளித்ததைக் கேள்விப்பட்டு, நமக்கும் பலன் தரும் என்று நம்பி, ‘ஃப்ரூட்டேரியன் டயட்’டை பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால் கவனம் அவசியம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தவா புலாவ்!

கோட் வேர்ட் அக்செப்ட்… அப்டேட் குமாரு

என் மகன் செய்தது சரினு சொல்லல… டாக்டர் இப்படி பண்ணலாமா?: விக்னேஷின் தாயார் பேட்டி!

அம்மாவின் கீமோவுக்கு பணம் இல்ல… கத்திக்குத்துக்கு முன் அரைமணி நேரம்… டாக்டர் பாலாஜி அறையில் நடந்தது என்ன?

Can you lose weight if you eat only fruits?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *