ஹெல்த் டிப்ஸ்: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்துதான்!

Published On:

| By Selvam

நமது உடலில் தண்ணீர்தான் 70 சதவிகிதம் இருக்கிறது. உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் தண்ணீர் இருக்கிறது. நமது உடலிலிருக்கும் கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதற்கு தண்ணீர் தேவை. உடல் வெப்பநிலையை நிர்வகிப்பதற்கு, மூட்டுகளின் உயவுத்தன்மைக்கு (Lubrication) வாய், மூக்குப் பகுதியில் ஈரப்பதத்தை நிர்வகிப்பதற்கு, ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு, ஜீரணத்துக்கு என பல விஷயங்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

ஒருவரின் வயது, பாலினம், காலநிலை, உடல் இயக்கம், உடல்நலப் பிரச்சினைகள், கர்ப்ப காலம், பாலூட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில்தான் ஒருவருக்கு தண்ணீர் தேவைப்படும். பொதுவாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் அதாவது சுமார் இரண்டரை முதல் 2.7 லிட்டர், ஆண்களுக்கு 12-13 டம்ளர், அதாவது மூன்றரை முதல் 3.7 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

பொதுவாக, நாம் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவும் உடலிலிருந்து அது வெளியேறும் அளவும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வராது. இதற்குச் சிறுநீரகம் உதவுகிறது. உடலில் நீரின் அளவு சிறிது அதிகமாகிவிட்டாலும், சிறுநீரகங்கள் இரண்டும் அதிகமாக வேலை செய்து அதிகப்படியாக உள்ள நீரைச் சிறுநீரில் வெளியேற்ற வேண்டியிருக்கும். அது பலவீனமாகும்.

இப்படிப்பட்ட நிலையில் தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றாலும், உடலில் நீரின் அளவு அதிகமாகிவிட்டது என்றாலும் சிறுநீரகம், அதை வெளியேற்றச் சிரமப்படுகிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிவித்துவிடும். குறிப்பாக, முகம் வீங்குவது இதற்குரிய முக்கிய அறிகுறி. கால் பாதங்கள் வீங்குவது, வயிறு வீங்குவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு வேளைக்கு அரை மணி நேரத்துக்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவை முடித்த பின்பு அரைமணி நேரம் கழித்து இரண்டு டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

வெளியில் செல்லும்போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share