பருக்கள் உள்ள பலர் சோசியல் மீடியாவில் இருக்கும் வைத்தியத்தைப் பார்த்து, சிலர் சொல்வதைக் கேட்டு, முகத்துக்கு சோப்போ வேறு க்ரீம்களோ உபயோகிக்காமல் கடலை மாவும் பயத்த மாவும் உபயோகிப்பார்கள். இதனால் அடிக்கடி அல்சர் ஏற்பட்டு முகப்பருக்கள் அதிகமாகவும் வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் பருக்களைப் போக்க, இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட என்னதான் தீர்வு?
“வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்துவது சிரமம். அப்படிப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றினால் இருக்கும் பருக்கள் மேலும் பெரிதாகி, சீழ்க்கட்டிகளாகி, பிறகு தழும்புகளும் நிரந்தரமாகிவிடும்.
எனவே, முதலில் சரும மருத்துவரை சந்தித்து உங்கள் பருக்களின் தீவிரத்துக்கேற்ப அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைப் பின்பற்றுங்கள்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
மேலும், “ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படை சரியான உணவுப்பழக்கம். அதிக மாவுச்சத்தும் இனிப்பும் பதப்படுத்திய உணவுகளும் பால் பொருள்களும் உள்ள உணவுப்பழக்கம் பருக்களைத் தூண்டும்.
தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரியாக வைத்துக்கொள்ளலாம்.
பருக்கள் வராமல் தடுக்க முறையான சருமப் பராமரிப்பும் முக்கியம். பருக்களை ஏற்படுத்துபவை ஒருவகை பாக்டீரியா. சருமத்தில் அதிக எண்ணெய்ப்பசை சுரந்தால் அதை உண்பதற்காக பாக்டீரியா கிருமிகள் முன்வரும்.
எனவே சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்துகிற மாதிரியான மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபேஸ்வாஷ் போன்ற புற சிகிச்சைகளை நாடலாம்.
இவற்றில் உங்களுக்கு எது சரி என்பதை பருக்களின் தீவிரத்தைப் பார்த்த பிறகுதான் மருத்துவரால் முடிவு செய்ய முடியும். ஆரம்ப நிலை என்றால் புறப்பூச்சுகளின் மூலமே சமாளிக்கப் பார்க்கலாம். அதுவே, பருக்கள் கட்டிகள் போல உருமாறி, உள்ளே சீழுடன் வலி நிறைந்ததாக இருந்தால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் மூலம்தான் குணப்படுத்த முடியும்.
உணவுப்பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள். அல்சருக்கும் பருக்களுக்கும் தொடர்பில்லை. குடலுக்கு நன்மை செய்கிற புரோபயாடிக் உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
சுவாரசியம் அடையும் உலகக்கோப்பை: பாகிஸ்தான் அபார வெற்றி!
வெற்றி விழா…விஜய் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு