இப்போது எங்கு பார்த்தாலும் பனங்கிழங்குகள் கிடைக்கின்றன. ஆனால், ‘இதைச் சாப்பிட்டால் வாய்வு ஏற்படும்… கால் தசைகள் பிடித்துக் கொள்ளும்… ஆண்மை விருத்திக்கு நல்லதல்ல… நீரிழிவாளர்கள் சாப்பிடவே கூடாது’ என்கிறார்கள். இது உண்மையா? சித்த மருத்துவர்கள் கூறும் பதில் என்ன?
“உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, அந்தந்த சீசனில் விளைபவற்றைத் தவறவிடாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தப்படும். அந்த வகையில், இப்போது பனங்கிழங்கு சீசன் என்பதால், அதைத் தவற விடாமல் எல்லா வயதினரும் எடுத்துக்கொள்ளலாம்.
பனங்கிழங்கில் நார்ச்சத்து தவிர, வேறு நிறைய சத்துகளும் உள்ளன. நார்ச்சத்தின் அளவு சற்று அதிகம். இப்போதைக்கு உலகத்தின் தேவையே நார்ச்சத்து மிகுந்த உணவுகள்தான். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களும் மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பனங்கிழங்குக்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உண்டு. உடலில் சேர்ந்த கழிவுகளை முறையாக வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு.
நார்ச்சத்து என பொதுவாகச் சொல்கிறோம். அந்த நார்ச்சத்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் மிகப் பெரிய செயலைச் செய்வதே மிக நல்ல விஷயம். அந்தத் தன்மை பனங்கிழங்குக்கு உண்டு. பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஆண்களுக்கு உடல் வன்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். அந்த வகையில் ஆண்மை விருத்திக்கும் இது உதவுகிறது.
பனங்கிழங்கை தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து புட்டு போல வேகவைத்துச் சாப்பிடச் சொல்லியும் குறிப்பு இருக்கிறது. பனங்கிழங்கின் உள்ளே உள்ள தண்டு, மேலுள்ள தோல் ஆகியவற்றை நீக்கிவிட்டு, கிழங்கை சிறிது சிறிதாக வெட்டி பொடித்து சத்துமாவாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். மதிப்புக்கூட்டல் பொருளாக சமீப காலமாக பனங்கிழங்கு மால்ட் என்ற பெயரில் இந்த மாவு பிரபலமாகி வருகிறது. அதை மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
நீரிழிவு உள்ளவர்கள், ஆசைக்காக ஒரு கிழங்கு என்ற அளவில் சாப்பிடுவதில் தவறில்லை. இதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட முடியாது என்பதால் அந்த பயமும் தேவையில்லை” என்கிறார்கள்.