நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 2,000 ரூபாய் கொடுத்ததற்கு சில்லறை இல்லை என்று மீண்டும் வண்டியில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்பதால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு ரூ.2000 நோட்டுடன் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். தனது இரு சக்கர வாகனத்தில் ரூ.100க்கு பெட்டோல் போட்டு விட்டு, 2 ஆயிரம் ரூபாயை காட்டி பங்க் ஊழியரிடம் நீட்டியுள்ளார்.
ஊழியரும் அதனை வாங்கி பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பெண் சூப்பர்வைசரிடம் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார்.
அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது எனக் கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் வாங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு பெட்ரோல் நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது பெட்ரொல் நிரப்ப வந்தவர், “ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு 2,000 ரூபாய் நோட்டை கொடுத்தால் சில்லறை தருகிறார்கள். பெட்ரோல் பங்க்-ல் சில்லறை இல்லை என்று சொல்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பங்க் சூப்பர்வைசர், “ஹோட்டலில் 4 இட்லி வாங்கி சாப்பிட்டு 40 ரூபாய்க்கு 2,000 ரூபாய் கொடுத்து சில்லறை கொடுத்தால் நானும் தருகிறேன்” என்று சூடாக பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பங்க் ஊழியர், பெண் சூப்பர்வைசர் கூறியதன் பேரில், பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் உறிஞ்சு குழாயை வைத்து இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டார்.
பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அங்கு இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சில்லறை மாற்ற 2,000 ரூபாய் நோட்டை கொடுத்தற்காக வண்டியில் இருந்து மீண்டும் பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதானியைத் தொடர்ந்து ’கை கொடுக்க’ களமிறங்கிய அம்பானி
ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ