பிரதமரை பார்க்க சிறுவனின் சட்டையை கழற்றிய அதிகாரிகள்

Published On:

| By christopher

கர்நாடகாவில் சாலை வழியாக காரில் ஊர்வலம் சென்ற பிரதமர் மோடியை பார்க்க சென்ற சிறுவன் கருப்பு டீசர்ட் அணிந்து வந்ததால் பரபரப்பு எற்பட்டது.

பெங்களூர்- மைசூரு இடையே அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்க பிரதமர் மோடி இன்று (மார்ச் 12) கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் பிஇஎஸ் கல்லூரி மைதானத்திற்கு அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் ஊர்வலமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே சாலையின் இருபுறமும் மோடியை வரவேற்க பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் தனது தாயாருடன் பிரதமரை பார்க்க அங்கு வந்துள்ளான்.

ஆனால் அங்கிருந்த காவல்துறை மற்றும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவன் அணிந்து வந்த கருப்பு நிற டீசர்ட்டை காரணம் காட்டி இருவருக்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக சிறுவனின் கருப்பு டீசர்ட்டை கழற்றி விட்டு பிரதமரின் ஊர்வலத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அந்த தாயும் மகனின் டீசர்ட்டை கழற்றிவிட்டு பிரதமரின் ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழையும்போதும் மகனை மேலாடையின்றி மெட்டல் டிடெக்டர்கள் வழியாக அழைத்து சென்ற அந்த தாய் அதன்பிறகு டி-சர்ட்டை அணிவித்துள்ளார்.

இதனைக்கண்ட போலீசார், அவரிடம் விரைந்து வந்து பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக கருப்பு சட்டையுடன் பையனை அரங்கில் அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

இதனையடுத்து மீண்டும் தனது மகனின் கருப்பு சட்டையை கழற்றி மேலாடையின்றி உள்ளே அழைத்துச் சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அந்த தாய்.

கிறிஸ்டோபர் ஜெமா

மிஸ்’ ஆனாலும் மிரட்டிய விராட் கோலி… கடைசி நாளில் சாதிக்குமா இந்திய அணி?

”கனவு காணும் காங்கிரஸ்”: கிண்டல் செய்த மோடி