Blisters on lips causes and solutions

பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்… காரணமும் தீர்வும்!

டிரெண்டிங்

சிலருக்கு அடிக்கடி உதடுகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண்ணாகி விடும். பல்லியின் எச்சம்பட்டதால் இப்படி ஏற்படும் என்பார்கள். அது உண்மையா… இதற்கான தீர்வு என்ன?

“உண்மையில் பல்லிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய நவீன மருத்துவத்தில் இந்தப் பிரச்சினையைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன.

இந்தப் பிரச்னையை ‘ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்’ (Herpes Simplex) தொற்று என்பார்கள். இது ஒருவகையான வைரஸ் தொற்று. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியதும்கூட.

ஆனால், இந்தத் தொற்று பாதித்த பலருக்கும் அது தம்மிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்ற விழிப்புணர்வே இருப்பதில்லை.

‘ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்’ தொற்றானது சிறு சிறு கொப்புளங்களையும் புண்களையும் ஏற்படுத்தும். வலியும் இருக்கும். இந்தத் தொற்றில் இரு வகைகள் உள்ளன.

ஒரு வகை தொற்றில் வாய் மற்றும் உதட்டுப் பகுதியைச் சுற்றி கொப்புளங்கள் வரும். இன்னொரு வகை தொற்றில் அந்தரங்க உறுப்பில் புண்கள், கொப்புளங்கள் வரும்.

உதட்டுப் பகுதி கொப்புளங்கள், சரியாகக் கழுவப்படாத டீ கிளாஸில் மற்றவரும் டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் எளிதில் பரவும். இந்தத் தொற்று உள்ளவர்கள் மற்றவர்களை முத்தமிடுவதன் மூலமும் இது மற்றவருக்குப் பரவும்.

சில வகை வைரஸ் தொற்றுகள் வரும்போதும் இந்த பாதிப்பு வரலாம். சிலவகை மருந்துகளின் பக்கவிளைவாலும் வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி கொப்புளங்கள் வரலாம். அப்படி வரும்போது மருத்துவ ஆலோசனையோடு ஆயின்மென்ட் உபயோகித்தாலே சரியாகிவிடும்.

மேலும், பி காம்ப்ளெக்ஸ் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிடுவோருக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை.

ஒருவருக்கு தொற்று வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களுக்கு அதைப் பரப்பாமல் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களுக்கு வந்தால், குழந்தைகளுக்கு முத்தமிடுவது, தான் உபயோகித்த டம்ளர், தட்டு, டவல் போன்றவற்றைத் தனியே வைப்பது என கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார்கள் பொது மருத்துவர்கள்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாட்ஸ் அப் WEB பயன்படுத்துவதிலும் மோசடியா? பயனர்களை எச்சரிக்கும் நிபுணர்கள்!

கிச்சன் கீர்த்தனா: பின்வீல் சமோசா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *