கடந்த மாதம் பைக் சாகசம் : இந்த மாதம் விழிப்புணர்வு!

டிரெண்டிங்

கடந்த மாதம் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் இன்று (அக்டோபர் 3) நீதிமன்ற உத்தரவுப்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார்.

இன்றைய இளைஞர்கள் பைக் சாகசம் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

அண்மையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன், அதிவேகமாகச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுபோன்று கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை சில இளைஞர்கள் வீலிங் செய்தபடி அபாயகரமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹாரிஸ்(16), முகமது சைபான் (19), ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பைக் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய்,

சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து அவருடன் பைக் சாசகத்தில் ஈடுபட்டு வீடியோ எடுக்கச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஹைதராபாத்தைச் சேர்ந்த பினோய் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பினோய் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் வழங்கினார். அதோடு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார்.

நிபந்தனைகள்

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை உருவாக்க வேண்டும்.

அதனை, 40,000 பேர் பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதுபோன்று கவனக்குறைவாக வாகனம் ஓட்டக்கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போதும், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டும் போதும் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தேனாம்பேட்டை-மவுண்ட் ரோடு சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 3 வாரங்களுக்கு, காலை 9:30 மணி முதல் 10:30 வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6. 30 வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வை ஏற்படுத்தத் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுவதற்கான செலவை மனுதாரரே ஏற்க வேண்டும்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் முன் ஆஜராகி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்ளும் வார்டு பாய்களுக்கு உதவ வேண்டும்.

அவசர பிரிவில் பெறும் அனுபவத்தைப் பற்றி தினமும் மருத்துவரிடம் மூன்று வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் திங்கள் முதல் விழிப்புணர்வைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி பினோய் இன்று தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

அவர் கையில் ஏந்தியிருந்த பதாகையில், “சாலை விதிகளை கடைபிடிப்போம்.
சாலை விதிகளை மதிப்போம், விபத்துகளை தவிர்ப்போம்.

இருசக்கர வாகனத்தை கொண்டு சாலையில் சாகசத்தில் ஈடுபடமாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.

பிரியா

புதுவை மின் ஊழியர்கள் மீது பாயும் எஸ்மா சட்டம்?

மணிரத்னத்துடன் இணையும் ரஜினிகாந்த்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.