பிக் பாஸ் சீசன் 8 : டார்கெட் செய்யப்படும் வைல்டு கார்ட் ஹவுஸ்மேட்ஸ்!
நாள் 31 : வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்ட் எண்ட்ரிக்குப் பிறகு பல திருப்பங்கள் நிகழும். ஆனால் இந்த சீசனில் அதற்கான பெரிய சாத்தியக் கூறுகள் தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே வீட்டில் இருக்கும் சீனியர் ஹவுஸ்மேட்ஸ் வைல்டு கார்ட் எண்ட்ரீஸை டார்கெட் செய்யத் தொடங்கியிருப்பதை இந்த எபிசோடில் பார்க்க முடிந்தது.
’இங்க இருக்குற யார் கூடயும் எனக்கு செட் ஆகல. அவங்க எல்லாரும் குரூப்பிஸம் பண்றாங்க. நான் நானா இருக்கேன். என்னைக்கும் சத்தியம் தான் ஜெயிக்கும்’ என்கிற ரேஞ்சில் கேமராவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார் வர்ஷினி.
வர்ஷினியைப் பொறுத்தவரை அவர் பிக் பாஸ் வீட்டின் ஆரம்ப கால சவுந்தர்யா. டாஸ்க்கும் கிடையாது, வீட்டு வேலையும் கிடையாது , கேமைப் பற்றிய புரிதலும் கிடையாது. ஆனால், தானே கார்னர் செய்யப்படுவதாக நம்பி வரும் பாரிஸ் கார்னர் வகையறா!
சரி, எதுக்கு இப்போதே அவரை தாக்கிக்கிட்டு! நாளை அவருக்கும் ஆர்மிப் படைகள் கிளம்பலாம். சவுந்துக்கே கிளம்பியவர்கள் அல்லவா இவர்கள். அவருக்கு எந்த பிஆர் வேலை செய்யுதோ..? இதற்குப் பின்னர் வீட்டில் யார் மற்றொருவர் மண்டையை கழுவுபவர் என்கிற கொளுத்தி போடும் வகையறா டாஸ்க்கை பிக் பாஸ் எடுத்துப் போட, பல வாக்குகள் ரியாவுக்கு விழுந்தன.
அதற்கு நமது முத்துக்குமரன் ஸ்டைலில் ‘வந்த 4 நாளுல என்னப் பத்தி இத்தனை பேர் பேசுறதே எனக்கு பெரிய விஷயம் தான்’ என ரியா பதிலளித்தது புத்திசாலித்தனமான தக் லைஃப் மொமெண்ட் என அவரே நினைத்துக் கொள்ளலாம்.
ஆம், ‘போற்றுவார் போற்றதும் ……’ என வசனம் பேசி பிக் பாஸ் கூட ரியாவை பாராட்டவில்லையே!? அந்த வீட்டில் எதற்கும் கண்டுக்காத அந்த பல்லி அந்த அவசியமற்ற அலப்பறைக்கு மட்டும் எப்படி வாழ்த்தியது என்பது இன்று வரை பலருக்கும் புதிரே. சென்ற வாரத்தில் முத்துக்குமரனின் அந்த அவசியமற்ற ஆணவச் செயலை கூண்டில் ஏற்றி நியாயம் கேட்ட சேதுபதி பிக் பாஸையும் கேட்டிருக்க வேண்டும்.
இந்த டாஸ்க்கிற்குப் பிறகு ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் வைல்டு கார்ட் எண்ட்ரி கொடுத்த ரியா, மஞ்சரியைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இதில் ரியாவைப் பொறுத்தவரை அவர் எடுத்ததற்கெல்லாம் அப்ஜெக்ட் செய்யும் அப்ஜெக்ட் திலகம். இதற்குப் பிறகு நோ நாமினேஷன் பாஸிற்கான இரண்டாவது டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ஒரு டாஸ்க் அறிவிக்கப்பட்டால் பெண்கள் அணியில் என்ன நடக்கும்..? ‘நான் தான் டாஸ்குக்கு போவேன்..!’ என சாச்சனா அடம்பிடிப்பார். இல்லையா..? அதே தான்.
தொடர்ந்து நாமினேஷன் பாஸ் ஜெயித்து வரும் பெண்கள் அணி இந்த முறை தவறவிட்டனர். ஆக, ஆண்கள் அணிக்கு கிடைத்த அந்த நோ நாமினேஷன் பாஸ் ஒருமனதாக ரஞ்சித்துக்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்து வந்த பாதை டாஸ்க் தொடங்கப்பட்டது.
அந்த டாஸ்கில் தந்தை கைவிட, தாயுடன் வளர்ந்த தர்ஷிகாவின் கதை, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு காதலி கொலைசெய்யப்பட்ட பெரும் துன்பத்தைக் கடந்து வந்த சத்யாவின் கதை பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கும். இந்த டாஸ்கின் நிறைவில் ‘ஏன் இன்னைக்கு பேசுன யாருக்கும் போர்டு தூக்கல’ என மஞ்சரியிடம் விஷால் கேட்க, கொஞ்சம் வாக்குவாதங்கள் நடந்தன.
ஆக, புதிதாக வந்த வைல்டு கார்டு எண்ட்ரிகளை சீனியர் ஹவுஸ்மேட்ஸ் டார்கெட் செய்வது மிக அப்பட்டமாகவே தெரிகிறது. இந்த ஒட்டு மொத்த எபிசோடில் ராணவ் என்கிற போட்டியாளரை கண்டுபிடித்து தரும் 5 நபர்களுக்கு கம்பெனியின் சிறப்பு பரிசுகள் உண்டு.
சுபம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழைக்காலத்தில் துண்டிக்கப்படும் 10 கிராமங்கள்: உயர்மட்ட பாலம் அமைக்க போராட்டம்!
புல்லட் ரயில் கட்டுமான பணி: கான்கிரீட் பிளாக் சரிந்து மூவர் பலி!
கார் லைசென்ஸ் வைத்திருந்தால் இனி கனரக வாகனங்களையும் ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஹெல்த் டிப்ஸ்: வெளியிடங்களில் சாப்பிடும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!