பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அர்ணவ்!

Published On:

| By christopher

Arnav leaves the Bigg Boss house

நாள் 13 : இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாராவது ஷாக் ஆனீர்களா…? இல்லை தானே? இந்தத் தகவலைக் கேட்டபோது எனக்கும் எந்த வித ஷாக்கும் வரவில்லை. ஆம், நமக்கு கிடைத்த தகவல் படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் அர்ணவ் தான்.

பிக் பாஸ் வீட்டில் மிகச் செயற்கையாக நடித்துக்கொண்டிருக்கும் நபர்களில் முக்கியமானவர் அர்ணவ். வீட்டில் வெறும் செயற்கையான செட் பிராபர்ட்டியாக இருப்பவரால் கேமில் எந்த வித சுவாரஸ்யமும் இருந்துவிடப் போவதில்லை. இருந்தாலும், இன்னும் பல கண்டெண்ட்களை நமக்குத் தர இருந்த நமது ‘செல்லம்மா’ அர்ணவை இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றியதை நமது ஸ்டைலில் மென்மையாக கண்டித்து இன்றைய எபிசோடின் விமர்சனத்திற்கு நகர்வோமாக.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சுயத்தை இழந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆண்கள் அணியினர், முத்துக்குமரனின் விமர்சனத்திற்குறிய ஸ்ட்ராடஜி, ஆண்கள் அணியின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ், மீம்ஸ்களில் டிரெண்டான அன்ஷிதா – முத்து இடையேயான அந்த சண்டை என வீட்டில் பேச வேண்டிய பஞ்சாயத்துகள் பல இருந்தாலும், வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சோற்றுப் பஞ்சாயத்தில் பிக் பாஸ் வீடே குழாய் அடி சண்டையாக மாறியதால், இந்த எபிசோடின் பாதி நேரம் அதைப் பேசுவதிலேயே போனது.

வாழைக்காய் பஜ்ஜி போல் வள வள வென இழுத்த அந்த பஞ்சாயத்து விசே- வையே சோர்வாக்கிய காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. அவருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சரி அது என்னது சம்பந்தி பஞ்சாயத்து..? சம்பந்தி என்பது ஒரு கேரளா டிஷ். அதை வெள்ளிக்கிழமை செய்துள்ளார் அன்ஷிதா. பெண்கள் அணியில் இருந்த குறைவான உணவுப் பொருட்களால் சாப்பாட்டில் கொஞ்சம் அளவு பார்த்து வைக்க வேண்டி இருந்தது போலும். இதில், எக்ஸ்ட்ரா சம்பந்தி கேட்ட சாச்சனாவிற்கு சம்பந்தி வரவில்லை. அவ்வளவு தான்.

’ ஒரு புறாவுக்கு போரா’ என வடிவேலு கேட்பது போல் வீட்டில் நிகழ்ந்த இந்த சம்பந்திப் போர் முடிவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது. இதில், நமது அட்டென்ஷன் சீக்கிங் தர்ஷா வேறு தனக்கும் முட்டை வரவில்லை என ஒரு கிளை பஞ்சாயத்தை இழுக்க வீடே ரணகளம் ஆகியுள்ளது. ஒரு பக்கம், ‘நான் சாப்பாடுக்கு பாக்குறவ கிடையாது’ என அன்ஷிதா அலற, மறுபக்கம் சாச்சனா கதற, ஒரு வித விநோதமான உணர்வு நமக்குள் ஏற்பட்டது.

ஆனால், இவ்வளவு களேபிரங்கள் மத்தியிலும் ஜாலியாக சாப்பிட்ட ஜெஃப்ரி, பஞ்சாயத்து செய்தவர்களுக்கே சம்பந்தி ஊட்டி விட்ட சவுந்தர்யா, ’கோபப்படுறப்போ சுனிதா கியூட்டா இருக்கால’ என சொன்ன அர்ணவ் என அனைவரையும் விசே கலாய்த்த காட்சிகள் ரசிக்க வைத்தது.

மேலும், குற்றம்சாட்டிய சாச்சனாவின் பக்கம் இருந்த நியாயத்தை விசாரித்து, ‘உன்ன நாங்க இந்த வீட்ல குழந்தையா பார்க்கணுமா..? இல்ல அடல்ட்டா பார்க்கணுமா..?’ என நறுக்கென்று கேட்ட கேள்வி, சாச்சனா தன்னைப் பற்றியே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. பின், அன்ஷிதாவிடமும் நியாயத்தைக் கேட்டு, அதை மிக நியாயமான நடுநிலைத் தன்மையுடன் அணுகினார்.

குறிப்பாக அன்ஷிதாவிடம் ‘கேட்ட சாச்சனாவுக்கு தராம கேட்காத அர்ணவுக்கு ஏன் சம்பந்தி தந்தீங்க’ என செய்த நக்கலும் சிறப்பு. மேலும், இதுகுறித்து மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்கும் போதும் , ‘கைய பிடிச்சு இழுத்தியா? இல்லையா?’ என்கிற மோடில் நறுக்கான பதிலையே கேட்டு வாங்கிய முறையும் சிறப்பு. ஆனால், இந்த ஹவுஸ்மேட்ஸ் பதில் கூறுவதில் கூட வள வள என இழுத்தடித்தது பார்க்கும் நம்மையே சோர்வாக்கியது.

ஆனால், சேதுபதியின் இந்த வார சிறப்பு வறுவல், தர்ஷா குப்தா தான். ‘அவ்வளவு பெரிய பிரச்சனை போகுது. இந்த நேரத்துல தான் உங்க முட்டை பிரச்சனைய கேட்பீங்களா..?’ என ஆரம்பித்து, ‘இந்த வீட்ல என்னைக்காவது நீங்க மத்தவங்களுக்காக பேசிருக்கீங்களா..? எப்ப பார்த்தாலும் என்ன சேர்த்துக்க மாட்றாங்க.., என்ன ஒதுக்குறாங்க.., எனக்கு இது கிடைக்கலன்னே பேசுறீங்க’ என வறுத்த வறுவலில் தர்ஷாவின் முகமே சுருங்கிப் போனது. பாவம் அந்த 2 மில்லியன் ஃபேன்ஸ்.

இதற்கு பின்னர், சரியான நேரத்தில் வீட்டில் தனது உரிமை குறித்து பேசிய ஜெஃப்ரி, சம்பந்தி கலவரத்தில் ஆனந்தியின் அணுகுமுறை, முத்துக்குமரனின் அசத்தலான நினைவாற்றல், ரஞ்சித்தின் ஸ்போர்டிவான விளையாட்டு, தீபக் பெண்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றை பாராட்டினார் சேதுபதி.

அடுத்ததாக, நாமினேஷனில் முத்துக்குமரனின் ஸ்ட்ராடஜிக்கு ஆமா சாமி போட்ட ஆண்கள் அணியை சுட்டிக்காட்டியது, இது தான் முத்துக்குமரனின் ஸ்ட்ராடஜி என பெண்கள் அணிக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது சிறப்பு. இது தான் வீட்டுக்குள் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும்.

நாம் எப்போதும் சொல்வது போல் பிக் பாஸ் என்பது 17 தனி நபர்களுக்குள் நடக்கும் சுய வெளிப்பாடு கலந்த போட்டியே தவிற ஒரே நபர் 17 பேரை வைத்து கேம் ஆடுவது அல்ல. அதை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நன்கு உணர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

ஒருவரின் பேச்சைக் கேட்டதால் நாமினேஷனில் அதிகப்படியான ஆண்கள் வந்ததையும் சுட்டிக்காட்டி இதுகுறித்து முத்துக்குமரனிடம் விளக்கம் கேட்டபோது, ‘இது என்னுடைய தவறான ஸ்ட்ராடஜி’ என ஒப்புக்கொண்டதையும் பார்க்க முடிந்தது. மேலும், ‘செஸ் விளையாட்டில் எங்கப்பா ஜோக்கர் வரும்’ என முத்துக்குமரனை வறுப்பதையும் தவறவில்லை விசே.

இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் குறிப்பாக ஆண்கள் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தால் மாறாக பெண்கள் அணியினரே இதை தட்டிக் கேட்டனர். ’நீங்க எப்படி இவ்வளவு சீப்பான கேம் விளையாடலாம்’ என பெண்கள் அணி கேட்க, ‘இது என்னோட கேம் ஸ்ட்ராடஜி’ என பதிலளித்தார் முத்துக்குமரன்.

ஆனால், தாங்கள் ஒருவரால் இயக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கூட உணராத அல்லது உணர மறுக்கும் ஆண்கள் அணியினர் ‘அவன் சொன்னதுனாலலாம் நம்ம நாமினேட் பண்ணலயே’ என்கிற மோடிலேயே வீட்டில் உள்ளனர்.

ஆக, அடுத்த வாரம் வீட்டாரின் கவனம் தனித்துவத்தை நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக முத்துக்குமரன் புதிய ஸ்ட்ராடஜிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எல்லாத்துக்கும் மேலாக, நமது ‘செல்லம்மா’ அர்ணவ் வெளியேறும் காட்சியையும் பார்க்க ஆவலுடன் உள்ளோம். இன்னும் அந்த வீட்டில் கலையப்பட வேண்டிய மற்றொரு செட் பிராபர்ட்டி, இந்த சீசனின் ‘டைட்டில் வின்னர்’ அருண்.

ஆனால், அவர் இருக்கும் மோடில் நிச்சயம் சென்ற டைட்டில் வின்னர் சரவண விக்ரம் போல் பல வாரம் மிக்சர் சாப்பிடுவார் என்றே தெரிகிறது. நாளை இன்னும் நிறைய வறுவல்களை விசே தருவார் என்கிற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஆரோக்கியம் காக்க… எதைச் சாப்பிடுவது… எதைத் தவிர்ப்பது?

பியூட்டி டிப்ஸ்: மாறாமல் இருக்கும் அம்மைத் தழும்புகள்… நீக்க முடியுமா?

டாப் 10 நியூஸ்: நெல்லையில் எடப்பாடி முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை பைனல் வரை!

கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share